கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கிய பிறகு முதன்முறையாக பெரிய அளவிலான கடற்துறை மாநாடு ஒன்று சிங்கப்பூரில் நடைபெறுகிறது. மரீனா பே சேண்ட்ஸ் மாநாட்டு நிலையத்தில் நேற்றிலிருந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் சுமார் 27 நாடுகளையும் வட்டாரங்களையும் சேர்ந்த பொருள்களும் இயந்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
17வது முறையாக நடைபெறும் 'ஏபிஎம்' எனப்படும் ஆசிய பசிபிக் கடற்துறை மாநாடு, இவ்வாண்டு சிங்கப்பூரில் நேரடி பங்கேற்பாளர்களுடன் நடைபெறும் அனைத்துலக அளவிலான இரண்டாவது நிகழ்ச்சி. மற்றொன்று சென்ற மாதம் நடைபெற்ற சிங்கப்பூர் விமானக் காட்சி.
நேற்றுத் தொடங்கிய இந்நிகழ்ச்சி மூன்று நாள்களுக்கு நடைபெறும்.
சரக்குக் கப்பல்கள், கடற்துறை இணையப் பாதுகாப்பு, கடற்துறை தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களில் இந்நிகழ்ச்சி கவனம் செலுத்தும்.
கடற்துறையில் எடுக்கவேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசிக்க வகைசெய்வது நிகழ்ச்சியின் நோக்கம்.
ஆசிய பசிபிக் கடற்துறை மாநாடு இதற்கு முன் கடைசியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் இடம்பெற்ற பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வோரில் கிட்டத்தட்ட இரு மடங்கு.

