சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரம் ஆர்ச்சர்ட் சாலை வட்டாரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அமைந்திருக்கும் வர்த்தக ரீதியான சொத்துகளில் இனி தனிப்பட்ட இடங்களைப் பிரித்து வெவ்வேறு உரிமையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதி இல்லை.
நேற்று முன்தினத்தில் புதிய விதிமுறை நடப்புக்கு வருவதாக நகரச் சீரமைப்பு வாரியம் அறிவித்துள்ளது.
அதன் தொடர்பில், மத்திய வட்டாரத்தைச் சேர்ந்த முக்கிய இடங்களில் அமைந்திருக்கும் வர்த்தகச் சொத்துகள் தொடர்பிலான புதிய விதிமுறை அறிமுகம் கண்டுள்ளது.
வருங்காலத்தில் அவை முறையாக நிர்வகிக்கப்படுவதையும் ஒரே முதன்மை உரிமையாளரின் கீழ் பராமரிக்கப்படுவதையும் உறுதிசெய்யும் விதிமுறை அது.
வர்த்தகச் சொத்துகளுடன் வர்த்தகம் உள்ளிட்ட பல பயன்பாட்டுக்கான சொத்துகளுக்கும் இந்தப் புதிய விதிமுறை பொருந்தும்.
இப்போது உள்ள வர்த்தகச் சொத்துகளில் பல்வேறு உரிமையாளர்கள் இருப்பதால், நிர்வாகம், பராமரிப்பு போன்றவை தொடர்பில் சவால்கள் எழுவதாக வாரியம் கூறியது.
உதாரணத்திற்கு வழக்கமான பராமரிப்பு அல்லது கட்டட மேம்பாட்டுப் பணிகளுக்குப் பொதுவான ஒப்புதல் பெறுவது சிரமமாக இருக் கலாம் என்பதை அது சுட்டியது.
புதிய விதிமுறை, ஆர்ச்சர்ட் சாலை, தங்ளின் சாலை, ஸ்காட்ஸ் சாலை, ஷெண்டன் வே, ராபின்ஸன் சாலை, ஆன்சன் சாலை, ராஃபிள்ஸ் கீ, ராஃபிள்ஸ் பிளேஸ் பூங்கா, சிங்கப்பூர் ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் இடங்கள் போன்ற தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களுக்குப் பொருந்தும்.
இந்நிலையில், எத்தனை கட்டடங்கள் புதிய விதிமுறையால் பாதிக்கப்படும் என்று வாரியத்திடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டுள்ளது.
மத்திய வர்த்தக வட்டார ஊக்கத் தொகை மற்றும் உத்திபூர்வ மேம்பாட்டுக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றுக்கு விண்ணப்பத்து உள்ள மறுமேம்பாட்டுக் கட்டங்களுக்கும் இந்தப் புதிய கட்டுப்பாடு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கோலியர்ஸ் நிறுவனம், புதிய விதிமுறை சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறியது.
மத்திய வர்த்தக வட்டார ஊக்கத் தொகை மற்றும் உத்திபூர்வ மேம்பாட்டுக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றின்கீழ், சில மறுமேம்பாட்டுத் திட்டங்கள் திட்டமிடப்பட்டிருப்பதாக கோலியர்ஸ் நிறுவனம் கூறியது.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் நிலையான வருமானம் மற்றும் நீண்டகால முதலீடு ஆகியவற்றைக் கருதியே சிங்கப்பூரில் வர்த்தகச் சொத்துகளை வாங்குவதாகக் கூறிய குஷ்மன் & வேக்ஃபீல்ட் நிறுவனம், புதிய விதிமுறையால் சந்தை நிலவரத்தில் மிகப் பெரிய தாக்கம் ஏதும் ஏற்படும் என்று கருதவில்லை என்றும் தெரிவித்தது.
மத்திய வர்த்தக வட்டாரக் கட்டடங்களில் நிர்வாகச் சவால்களுக்கான தீர்வு

