'சிங்பாஸ்' கணக்கு காலாவதி: பொய்யான குறுஞ்செய்தி
சிங்பாஸ் கணக்கு காலாவதி ஆகிவிட்டதாகவும் அதனை மீண்டும் செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கூறும் பொய்யான குறுஞ்செய்தி குறித்து அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பான கவ்டெக் எச்சரித்துள்ளது.
மோசடிக்காரர்கள் குறுஞ்செய்தி மூலம் சிங்பாஸ் அடையாள எண், மறைச்சொல் உள்ளிட்டவற்றைப் போலி இணையத்தளம் ஒன்றில் பதியும்படி கேட்பதாக அது குறிப் பிட்டது. மோசடி தொடர்பில் புகார் அளிக்கப்பட்டிருப்பதைக் காவல்துறை நேற்று உறுதிசெய்தது. போலி இணையத்தளம் முடக்கப்பட்டுவிட்டதாக கவ்டெக் தெரிவித்தது.
சிங்பாஸ் தொடர்பில் அத்தகைய குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதில்லை என்பதை அது நினைவூட்டியது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்தால் அதிகாரபூர்வ அமைப்புடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும்படியும் அது கேட்டுக்கொண்டது.
உணவு விநியோகிப்பாளருக்கு
$3,000 அபராதம்
உரிமம் பெறாத வளாகத்தில் வைத்து தின்பண்டங்களை மறுபொட்டலமிட்டதன் தொடர்பில், மியா ஃபூட் உணவு விநியோகிப்பு நிறுவனத்திற்கு நேற்று மூவாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு மே மாதம், சிங்கப்பூர் உணவு அமைப்பின் அதிகாரிகள் அந்நிறுவன வளாகத்தில் சோதனை நடத்தினர். பல்வேறு தின்பண்டங்கள் அங்கே மறுபொட்டலமிடப்பட்டன. அதிகாரிகள் 600 கிலோகிராம் அளவிலான தின்பண்டங்களை அங்கிருந்து பறிமுதல் செய்தனர். உரிமம் பெறாத வளாகத்தில் சட்டவிரோதமாக உணவுப் பொருள்களை மறுபொட்டலமிடுவது உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை அமைப்பு சுட்டியது.
$54,700 வாடகை மோசடி;
ஆடவர் கைது
சிங்கப்பூரில் தொடர்ச்சியாக வாடகை மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், கடந்த திங்கட்கிழமை, 32 வயது ஆடவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் அவரிடம் $54,700 பறிகொடுத்ததாகச் சிலர் புகார் அளித்திருந்தனர். வாடகைக்குக் குடியிருக்க வீடுகள் ஏற்பாடு செய்வதாக இணையத்தில் வெளியான விளம்பரங்களை நம்பி அவர்கள் வைப்புத்தொகை செலுத்தினர்; அதன் பிறகு ஆடவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
உட்லண்ட்ஸ் காவல்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு அந்த ஆடவரைக் கைதுசெய்தனர். அத்தகைய மேலும் 24 மோசடிச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட ஆடவருக்கு சிறையும் அபராதமும்
சிங்கப்பூரில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட ஆடவருக்கு நேற்று ஆறு ஆண்டுகள் ஏழு மாதச் சிறைத்தண்டனையும் 1,800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன.
27 வயது ஜெரால்ட் லோ லிங் யோங், பாதிக்கப்பட்டவர்களிடம் பல பொய்களைக் கூறி கைத்தொலைபேசி இணைப்புகளுக்கு விண்ணப்பிக்கச் சொன்னதாகவும் அதன் மூலம் கைப்பேசிகளை ரொக்கப் பணத்துக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்பட்டது. அவர்களது தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி கார்களை வாடகைக்கு எடுத்த அவர், வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இன்றியே அந்த கார்களை ஓட்டியதும் தெரியவந்தது.
2017ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையில் எட்டு பேரிடம் காதலிப்பதாகக் கூறி 150,000 வெள்ளிக்கும் மேலான தொகையை ஏமாற்றினார். அவர்களில் சிலர் ஆண்கள். சிங்கப்பூரரான அவர், மனநலப் பிரச்சினை உள்ள 35 வயது பெண்ணைத் திருமணம் செய்யவும் விண்ணப்பித்திருந்தார்.அத்தகைய குற்றங்களின் தொடர்பில் லோவிற்கு நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு ஓராண்டுக்கு அவர் வாகனம் ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
லோ, ஏமாற்றுவேலை, உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது ஆகியவை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவருக்கு தண்டனை வழங்கும்போது அத்தகைய மேலும் 35 குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொள்ளப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

