சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, வெவ்வேறு சம்பவங்களில் குடியிருப்புப் பேட்டையில் மூண்ட தீயை அணைக்கத் துணிச்சலுடன் செயல்பட்ட இருவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சென்ற ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி, ஜூரோங் ஈஸ்ட்டில் அமைந்திருக்கும் கூட்டுரிமை வீட்டின் 14ஆவது தளத்தில் உள்ள வீட்டில் தீ மூண்டபோது, அண்டை வீட்டுக்காரரான 48 வயது கத்ரானி பிட்டன் ஓடோடிச் சென்று உதவினார்.
சமையலறையில் மூண்ட தீயை, தங்கள் கட்டடத்தில் உள்ள தீயணைப்புக் கருவியின் உதவியுடன் அணைத்தார்.
நேற்று விருது பெற்ற மற்றொருவர் ஜூரோங் ஈஸ்ட்டில் அமைந்திருக்கும் ஜே கேட்வே கூட்டுரிமை வீடுகளின் பாதுகாப்புக் கண்காணிப்பாளரான 36 வயது ஷாம்குமார் கெண்டராஜன்.
சென்ற ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி அவர் பணியில் இருந்தபோது தீ மூண்டதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.
ஒன்பதாவது மாடியில் புகையைப் பார்த்த அவர் படிகளின் வழியாக விரைந்து சென்றார்.
குடியிருப்பாளர்கள் இருவரின் உதவியுடன் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார்.
கத்ரானி, ஷாம்குமார் இருவருக்கும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் நான்காம் பிரிவு விருது வழங்கிப் பாராட்டியது.
அதன் தளபதியான கர்னல் கோ பூன் ஹான், பொதுமக்கள் அடிப்படை தீயணைப்பு போன்ற உயிர்காக்கும் திறன்களைக் கற்றுக்கொள்ளுதல் நல்லது என்று கூறினார்.
அவசர காலத்தில் முன்வந்து உதவ அது உதவும் என்றார் அவர்.

