முன்னாள் பணிப்பெண்ணின் கோரிக்கையை ஏற்க மறுப்பு
இரண்டு அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் மீது முன்னாள் பணிப்பெண் பார்டி லியானி (படம்) அளித்த புகாரை ஒழுங்குமுறை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தம்மிடம் விசாரணை நடத்திய இரு வழக்கறிஞர்களும், தாம் திருடியதாகச் சொல்லப்பட்ட டிவிடி பிளேயர் முழுமையாக இயங்கக்கூடியது என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கியதாக அந்தப் பெண் புகார் அளித்திருந்தார்.
ஆனால், வழக்கறிஞர்களான திருவாட்டி டான் யான்யிங் மற்றும் திரு டான் வீ ஹாவ் மீது சட்டத் தொழில் சட்டத்தின்கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போதுமான முகாந்திரம் இல்லை என நடுவர் மன்றம் கண்டறிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மூத்த நீதிபதி சாவ் ஹிக் டின், மூத்த வழக்கறிஞர் பேட்ரிக் ஆங் ஆகிய இருவர் அடங்கிய நடுவர் மன்றம், டிவிடி பிளேயரை இயக்கிய விதத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஒளிவுமறைவின்றி, நியாயமாக நடந்துகொண்டதை கண்டறிந்ததாகக் கூறியது.
இருப்பினும், டிவிடி பிளேயரின் நிலையை உறுதிப்படுத்த, விசாரணையின்போது இன்னும் அதிகம் செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
அந்த சாதனத்தால் வீடியோ படங்களைப் பதிவு செய்யவும் பதிவு செய்ததை போட்டுப் பார்க்கவும் முடியும். ஆனால், அதில் டிவிடி இயங்காது எனத் தெரியவந்தது.
பிரபலத் தொழிலதிபர் லியு மன் லியோங் என்பவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்தபோது திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட திருவாட்டி பார்டி, 48, தமது குற்றச்சாட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
அந்த மேல்முறையீட்டு மனு மீது நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் 2020 செப்டம்பர் மாதம் அவரை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
$34,000 மதிப்புள்ள பொருள் களைத் திருடியதாக அந்த இந்தோனீசியப் பணிப்பெண் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவர் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பொருள்களில் டிவிடி பிளேயர் ஒன்றும் அடங்கும். அது தொடர்பாக அவர் புகார் அளித்திருந்தார்.

