மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 28லிருந்து 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 10 முதல் 16 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மொத்தம் 280 கிராம் கொக்கெய்ன், 54 கிராம் கஞ்சா, 33 எக்ஸ்டசி மாத்திரைகள், கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் எனும் நம்பப்படும் 245 கிராம் பழுப்பு நிற தூள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மார்ச் 10 அன்று அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு பேட்டையில் 61 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார். அவருடைய வீட்டைச் சோதனையிட்டபோது, 277 கிராம் கொக்கெய்ன், 14 கிராம் கஞ்சா, 245 கிராம் பளுப்பு நிற தூள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. புத்தகங்களின் நடுவிலும் பதவி வட்டுகளிலும் போதைப் பொருள் ஒளித்துவைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் இருந்த 59 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டார்.
அதே குடியிருப்புப் பேட்டையில் இருந்த 32 வயது ஆடவர் போதைப் பொருள் தொடர்பான குற்றத்துக்காக பின்னர் கைதுசெய்யப்பட்டார்.
மார்ச் 15அன்று நடத்தப்பட்ட சோதனையில் 11 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் சிங்கப்பூரர்கள், ஏழு பேர் வெளிநாட்டினர். அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா, 3 கிராம் கொக்கெய்ன், 33 எக்ஸ்டசி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
30 கிராமுக்கு மேல் கொக்கெய்ன் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
போதைப் பொருள் நடவடிக்கை தொடர்பாக கைதானவர்கள் விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.

