சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் செயல்படும் கிரிஸ்ஷாபின் 4,749 வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் ஊடுருவப்பட்டுள்ளன.
பெயர், மின்னஞ்சல், முகவரி, தொடர்பு எண், கிரிஸ்கடை பற்றுச்சீட்டு எண்கள் ஆகிய விவரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 165 வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களும், 17 பேரின் கிரஸ்ஃப்ளையர் தகவல்களும் ஊடுருவப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடன்பற்று அட்டை எண், மறைவுச்சொல் போன்ற விவரங்களுக்குப் பாதிப்பு இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக கிரிஸ்ஷாப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
நிறுவனத்தில் வேலைபாராத ஒருவர் கிரிஸ்ஷாப் ஊழியர் ஒருவரின் கணினியை நுழைந்ததாகவும், அதன் மூலம் தகவல்கள் ஊடுருவப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஊடுருவல் சம்பவம் பற்றி எச்சரிக்கை கிடைத்ததும், பாதிக்கப்பட்ட கணினியும், ஊழியரின் கணினி கணக்கும் முடக்கப்பட்டன.
விசாரணையில் 4,749 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக கிரிஸ்ஷாப் பேச்சாளர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு, அவர்களைத் தொடர்புகொண்டு உதவி வழங்கிவருவதாகக் கிரிஸ்ஷாப் கூறியது.
கிரிஸ்ஷாபின் மற்ற கணினி, இணையக் கட்டமைப்புகள் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.


