'தாவ் சுவான்' எனும் பிரபல உணவு வகையில் பயன்படுத்தப்படும் பயற்றம் பருப்புதான் சிங்கப்பூரில் அமையவிருக்கும் புதிய தாவரப் புரதச் சத்து ஆலையில் பரவலாகப் பயன்படுத்தப்படும். இதை முக்கிய உணவுப் பொருளாகக்கொண்டே மாற்று புரதச் சத்து உள்ள உணவு வகைகள் தயாரிக்கப்படும் என்று ஆலையை நடத்தவுள்ள 'ஈட் ஜஸ்ட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்னும் ஈராண்டுகளில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய தாவரப் புரதச் சத்து ஆலையான இது கட்டப்படும். பயனியர் வட்டாரத்தில் 2.7 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலத்தில் இந்த ஆலை கட்டப்படும். ஆண்டுதோறும் ஆயிரம் டன்கள் கணக்கிலான தாவரப் பொருள்களிலிருந்து வரும் புரதச் சத்து ஆலையில் தயாராகும். இதன் மூலம் சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு வலுவடையும்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த புதிதாகத் தொடங்கப்பட்ட 'ஈ்ட் ஜஸ்ட்' நிறுவனம் ஆலையை நடத்தும். இந்த ஆலையை அமைக்க 'ஈட் ஜஸ்ட்', 'புரோட்டேரா இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ் ஏஷியா' ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 120 மில்லயின் அமெரிக்க டாலரை முதலீடு செய்கின்றன.
'புரோட்டேரா இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ் ஏஷியா', உணவு, வேளாண் வர்த்தகத் துறையில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தும் நிறுவனம்.
'ஈட் ஜஸ்ட்' ஆலைக்கான நில அகழ்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் மாதிரி முட்டைகளால் தயாரான 'ஈட் ஜஸ்ட்'டின் உணவுப் பொருள்களை செய்தியாளர்கள், முதலீட்டாளர்கள், அரசாங்கத் தலைவர்கள் ஆகியோர் உட்கொண்டனர்.
நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில் அமைச்சர் லோ யென் லிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாதிரி முட்டைகளின் சுவை உண்மையான முட்டைகளின் சுவையைப் போலவே இருந்ததாகத் திருவாட்டி லோ கூறினார். அத்தியாவசியப் பொருள்களுக்கான விநியோகச் சங்கிலியின் மீள்திறனை வளர்க்க இந்தப் புதிய ஆலை பங்காற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.
"உள்ளூரில் பொருள்களைத் தயாரிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இது பேருதவியாக அமையும். பல்வேறு இடங்களிலிருந்து இறக்குமதி செய்து வருவது, தேசிய அளவிலான கையிருப்பு ஆகிய ஏற்பாடுகளுடன் சேர்ந்து இந்த முயற்சியும் கைகொடுக்கும்," என்று திருவாட்டி சுட்டினார்.
2030ஆம் ஆண்டுக்குள் தனக்குத் தேவையான ஊட்டச்சத்தில் 30 விழுக்காட்டை உள்ளூரில் தயாரிப்பது சிங்கப்பூரின் இலக்கு.

