சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் நோயாளிகள் இனி செயலிகளைக் கொண்டு தாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் குறித்த விவரங்களைப் பெறமுடியும். மின்னிலக்க சேவைகளைப் பயன்படுத்த சிரமப்படுவோர் அவற்றுக்குப் பழக்கப்பட்ட குடும்பத்தார் ஒருவரை நியமித்து தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மருத்துவர் வழங்கும் 'ப்ரிஸ்கிரிப்ஷன்ஸ்' எனப்படும் மருந்துக் குறிப்புகளில் எவற்றை மீண்டும் வாங்கவேண்டும் போன்ற தகவல்களை இந்தச் சேவையின் மூலம் பெறலாம். தனது நோயாளிகளின் மருந்துக் குறிப்புகளை மின்னிலக்கமயமாக்கி உள்ளதாக பொது மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
'ஹெல்த்ஹப்', 'ஹெல்த் படி' செயலிகளில் 'எம்ஓஎஸ்' எனும் மருந்து விண்ணப்பச் சேவையை மருத்துவமனை சென்ற ஆண்டு மேம்படுத்தியது. இதன் மூலம் தாங்கள் பயன்படுத்தும் மருந்துகளை எத்தனை நாள்களுக்குப் பயன்படுத்தமுடியும், பெற்றுக்கொள்ளாத மருந்துகள் போன்ற மருந்துப் பயன்பாட்டு விவரங்களை நோயாளிகள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தச் சேவையால் நோயாளிகளால் தங்களின் சுகாதாரத்தைத் தாங்களே கண்காணிக்கமுடியும் என்றும் போதுமான மருந்து இல்லாமல் போகும் நிலையை அவர்களால் தவிர்க்கமுடியும் என்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் மருந்துக் கடை நிர்வாகியான திருவாட்டி லிம் சிங் ஹுய் கூறினார்.
முன்னதாக நோயாளிகளால் தங்களின் மருந்துக் குறிப்புகளை 'ஹெல்த்ஹப்' செயலியில் பார்க்கமுடிந்தது. ஆனால், மருந்துப் பயன்பாட்டு விவரங்களைத் தாங்களாகவே கண்காணிக்க வேண்டியிருந்தது.
வயதான நோயாளி ஒருவர் தனது மருந்துப் பயன்பாட்டு விவரங்களைச் சரிவரக் கவனிக்காமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று திருவாட்டி லிம் சுட்டினார். குறிப்பாக அதிக மருந்துகளைப் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு இந்நிலை உருவாகலாம் என்பதை அவர் குறிப்பிட்டார்.
தனது மருந்து நிலையத்தில் மருந்து வாங்க வரும் 170,000க்கும் அதிகமான நோயாளிகள் இதனால் பலனடைவர் என்று சிங்கப்பூர் பொது மருத்துவமனை கணித்துள்ளது.
சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு தெலுக் பிளாங்காவில் இரண்டு குடும்ப சேவை நிலையங்கள் உள்ளன. அவற்றுக்கு அருகே வசிக்கும் தனது நோயாளிகளுக்கு உதவ பொது மருத்துவமனை 'மோன்ட்ஃபர்ட் கேர்' சமூக சேவை அமைப்புடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நோயாளிகளின் மருந்துகளை இந்தக் குடும்ப சேவை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட சேவைகளுக்கு இந்த ஏற்பாடு வகைசெய்யும்.

