சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களுக்குள் சில்லறை விற்பனை செய்யும் கிரிஸ்ஷாப் நிறுவன ஊழியரின் நிறுவனக் கணக்கு இணையத் தாக்குதலுக்கு உள்ளானதில், 4,749 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஊடுருவப்பட்டுள்ளன.
பெயர், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி, தொடர்பு எண், கிரிஸ்ஷாப் மின்-பற்றுச்சீட்டு எண் ஆகியவை திருடப்பட்ட தகவல்களில் அடங்கும்.
மேலும், 165 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு எண்களும் 17 பேரின் கிரிஸ்ஃபிளையர் கணக்கு எண்களும் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் மறைச்சொற்களோ கடன்பற்றுச் சீட்டு விவரங்களோ ஊடுருவப்படவில்லை என்று தங்கள் விசாரணையில் தெரியவந்ததாக கிரிஸ்ஃபிளையர் நிறுவனப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
மார்ச் 8ஆம் தேதி ஊடுருவலைக் கண்டுபிடித்ததாக அவர் குறிப்பிட்டார். ஊடுருவியவர்கள் யார் என்பது உள்ளிட்ட மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.
மார்ச் 10ஆம் தேதி, இணைய ஊடுருவல் குறித்து தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்திற்குத் தகவல் அளித்ததாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் கிரிஸ்ஃபிளையர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
அவர்களைத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைச் செய்துவருவதாகவும் அது கூறியது.
பாதிக்கப்பட்ட மின்-பற்றுச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதுடன், வாடிக்கையாளர்களுக்குப் புதிய மின்-பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தனிப்பட்ட இணைய ஊடுருவல் சம்பவம் என்றும் நிறுவனத்தின் தகவல் கட்டமைப்போ தகவல் தரவுகளோ பாதிக்கப்படவில்லை என்றும் பேச்சாளர் கூறினார்.
கிரிஸ்ஃபிளையர் நிறுவனத்தின் தகவல் கட்டமைப்பையும் அதன் செயல்முறைகளையும் தொடர்ந்து வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வாடிக்கையாளர்களின் தனிபப்ட்ட தகவல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன 'கிரிஸ்ஷாப்' தளத்தில் ஊடுருவல்

