கரியமில வாயு குறைப்புக்கு $500 மில்லியன் முதலீடு

கரியமில வாயு குறைப்புக்கு $500 மில்லியன் முதலீடு

2 mins read
84db6df1-3743-4c05-a7fa-f4cd1e6f14ba
-

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் சொத்து நிர்வாக நிறுவனமான குனுங் கேப்பிடல், அது நிர்வகிக்கும் தொழிலியல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் கரிய வெளிப்பாட்டைக் குறைப்பதற்கு 500 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்யவிருக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளில் அது அவ்வாறு முதலீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறை சார்ந்த மற்ற சிறிய நிறுவங்களுக்கும் கரியமில வாயு அறவே இல்லாத நிலையை இலக்காகக் கொண்ட திட்டங்களுக்கு உதவவும் திட்டமிடுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அது தெரிவித்தது.

இந்தோனீசியப் பெருவணிகரான கிமின் டனோட்டோவும் சிங்கப்பூரரான கெல்வின் ஃபூவும் இணைந்து தோற்றுவித்த நிறுவனம் குனுங் கேப்பிடல்.

இந்தோனீசியாவின் ஆகப் பெரிய எஃகு உற்பத்தி நிறுவனமான குனுங் ராஜ பக்சி உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகளையும் கட்டடங்களையும் அது நிர்வகித்து வருகிறது.

அந்தத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட கரியமில வாயு வெளியேற்றக் குறைப்பு நடவடிக்கைகளின் மூலம் கிட்டிய அனுபவத்தைக் கொண்டு இதர சிறிய நிறுவனங்களுக்கும் குனுங் கேப்பிடல் உதவ முடியும் என்று திரு ஃபூ குறிப்பிட்டார்.

வர்த்தகங்கள் போட்டித்தன்மையுடன் திகழ, கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் திரு டனோட்டோ.

குனுங் கேபிடல் நிறுவனம், பருவநிலை மாற்றத்துக்கான ஆசிய முதலீட்டாளர் குழுமத்திலும் சென்ற ஆண்டு இணைந்துகொண்டது. அதன் அண்மைய முதலீட்டு முயற்சி, இந்த வட்டாரத்தில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மற்றும் நிதி நிலையங்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகின் ஒட்டுமொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் எஃகு உற்பத்தித் தொழிற்சாலைகள் ஏழு முதல் ஒன்பது விழுக்காடு.