தண்ணீருக்கான நீடித்த நிலைத்தன்மை தொடர்பில் சிங்கப்பூரின் உறுதியான கடப்பாட்டை வெளிப்படுத்தும் வண்ணம் இங்குள்ள முக்கியக் கட்டடங்கள் மார்ச் 19 முதல் முதல் மார்ச் 22 வரை நீல நிற விளக்குகளால் அலங்கரிக்கப்படவிருக்கின்றன.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் "நீலமாய் மாறும் நகரம்" எனும் முயற்சியின்கீழ் 56 முக்கியக் கட்டடங்களில் நீல வண்ண விளக்குகள் ஒளி உமிழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் இணைந்த இயோன் ஆர்ச்சர்ட், கலைஅறிவியல் அரும்பொருளகம் போன்றவற்றுடன் இந்த ஆண்டு 16 புதிய கட்டடங்கள் இணையவிருக்கின்றன. கேபிடோல் சிங்கப்பூர், ஃபுல்லர்ட்டன் ஹோட்டல், மரினா பே நிதி நிலையம் போன்றவை அவற்றுள் அடங்கும்.
இந்த முறை சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழகம், தெமாசெக் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட சில உயர்கல்வி நிலையங்களும் இதில் இணையவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் தினத்தை அனுசரிக்கும் விதமான இந்த முயற்சியில் மொத்தம் 460 பங்காளிகள் கைகோத்து, தண்ணீரைச் சேமிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கின்றன.

