கலாசார மேம்பாட்டுக்கு ஊடகத்துடன் கைகோக்கும் கலாசார நிலையம்
சிங்கப்பூரில் சீனக் கலாசார வளர்ச்சிக்கு உதவும் நோக்கில், எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் சீன ஊடகக் குழுமமும் சிங்கப்பூர் சீனக் கலாசார நிலையமும் அவற்றுக்கு இடையிலான பங்காளித்துவத்தைப் புதுப்பித்துக்கொண்டுள்ளன.
அதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு நேற்று கையெழுத்தானது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிங்கப்பூரில் சீனக் கலாசார ரீதியிலான புத்தாக்க நடவடிக்கைகளின் தொடர்பில் இரு அமைப்புகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்ற அது வகைசெய்யும். கூடுதலானோர் அந்த நடவடிக்கைகளில் பங்குபெற இயலும்.
2017ஆம் ஆண்டு முதல்முறையாகக் கையெழுத்தான புரிந்துணர்வுக் குறிப்பின்கீழ், எஸ்எம்டியின் சீன நாளேடான லியான் ஹ சாவ்பாவ் 30க்கும் மேற்பட்ட கலாசார நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. உள்ளூர்க் கலை, கலாசார வல்லுநர்களைக் கொண்டு பயிலரங்குகள் நடத்தப்பட்டன. அவர்களின் உரைகளுடன் படங்களும் திரையிடப்பட்டன.
வங்கிகளின் பெயரிலான மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை
சிங்கப்பூர் காவல்துறை, வங்கிகளின் பெயரில் நடத்தப்படும் மூன்று வகையான மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களை எச்சரித்துள்ளது.
மோசடிக்காரர்கள் கருத்தாய்வு நடத்துவதாகக் கூறி மின்னஞ்சல் அனுப்புவது முதல் வகை. இரண்டாவதில், வங்கியின் நிரந்தர வைப்புத்தொகைத் திட்டங்கள் போன்றவை தொடர்பில் குறுஞ்செய்திகள் அனுப்புவார்கள்; மூன்றாவதாக, வங்கியின் வர்த்தகச் சின்னத்தைப் பின்னணியில் அமைத்துக்கொண்டு காணொளி மூலமான தொலைபேசி அழைப்பை அவர்கள் மேற்கொள்வதாகக் காவல்துறை குறிப்பிட்டது. வங்கிகள் அத்தகைய மின்னஞ்சல்களையோ, குறுஞ்செய்திகளையோ அனுப்புவது வழக்கமல்ல என்பதைப் பொதுமக்களுக்கு அது நினைவுறுத்தியது.
பெட்ரோல் விலையை $3க்கு கீழ் குறைத்தது எஸ்ஸோ
எஸ்ஸோ நிறுவனம் சிங்கப்பூரில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு மூன்று வெள்ளிக்குக் கீழ் குறைத்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரியும் வேளையில், நிறுவனம் அதன் பெட்ரோல் விலையை லிட்டருக்குப் பத்து காசு குறைத்துள்ளது. 92-ஆக்டேன் ரக பெட்ரோல் லிட்டருக்கு $2.95 ஆக உள்ளது. 95-ஆக்டேன் ரக பெட்ரோல் லிட்டருக்கு $2.99க்கு விற்பனை ஆகிறது.
98-ஆக்டேன் ரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு $3.46ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு மூன்று வெள்ளிக்கும் குறைவாக விற்பனை ஆவது இதுவே முதல்முறை. டிபிஎஸ் எஸ்ஸோ அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் விலைக் கழிவு கிடைக்கும்.
ஒரு பீப்பாய் பிரென்ட் ரகக் கச்சா எண்ணெய் தொடர்ந்து இரண்டாவது நாளாக நூறு அமெரிக்க டாலருக்குக் கீழ் குறைந்துள்ளது.

