தண்ணீர் சுத்திகரிப்புக்கான மேம்பட்ட தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழும் ஜப்பானியப் பேராசிரியர் கஸுவோ யமாமோட்டோவிற்கு 2020ஆம் ஆண்டின் லீ குவான் இயூ தண்ணீர் விருது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தோக்கியோ பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான திரு யமாமோட்டோ, 1980களில் நீருக்கடியில் பொருத்தக்கூடிய சவ்வு வடிகட்டித் தொழில்நுட்பத்தை வடிவமைத்தார்.
இத்தகைய மேம்படுத்தப்பட்ட வடிகட்டும் முறை, உயிரியல் கழிவுகளைக் கொண்ட தண்ணீரைச் சுத்திகரிக்க உதவுகிறது.
சிங்கப்பூரில் நியூவாட்டர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் இந்த முறை கைகொடுத்தது.
வடிகட்டும் சவ்வு, கழிவுநீருக்குள் மூழ்கிய நிலையில் பொருத்தப்படுவதால் தண்ணீர் சுத்திகரிப்புக்குத் தேவைப்படும் நிலத்தின் பரப்பளவும் குறைகிறது.
1980களில் பேராசிரியர் யமாமோட்டோவின் சிந்தனைக்கு அவ்வளவாக வரவேற்பில்லை.
அப்போது நடப்பில் இருந்த அறிவியல் சிந்தனைமுறை மற்றும் பொறியியல் கருத்துகளுக்கு எதிரானதாக இருந்ததே அதற்குக் காரணம். அப்போதெல்லாம் சவ்வு வடிகட்டிகளை கழிவுநீர் நிரம்பிய தொட்டிக்கு வெளியில் பொருத்துவதே வழக்கமாய் இருந்தது.
இருப்பினும் 15 ஆண்டுகளுக்குள் அவரது கண்டுபிடிப்பு உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை, பொதுப் பயனீட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாகி இங் ஜூ ஹீ குறிப்பிட்டார்.
நேற்று 2020ஆம் ஆண்டுக்கான லீ குவான் இயூ தண்ணீர் விருதை அறிவித்து அவர் உரையாற்றினார்.
2008ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் அந்த விருதைப் பெறும் முதல் ஆசிய தனிமனிதர் என்ற பெருமை பேராசிரியர் யமாமோட்டோவைச் சாரும்.
அவருக்கு தெமாசெக் அறநிறுவனம் வழங்கும் 300,000 வெள்ளி ரொக்கப் பணத்துடன் சான்றிதழும் தங்கப் பதக்கமும் வழங்கப்படும்.
வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து அவர் அவற்றைப் பெற்றுக்கொள்வார் என்று கூறப்பட்டது.

