ஒரு பாலர்பள்ளியில் சிசுப் பராமரிப்பு ஆசிரியர் ஒரு வயது சிறுவனின் முதுகில் கடுமையான காயம் ஏற்படும் வரை தாக்கியுள்ளார். முதுகில் ஏற்பட்ட தழும்புகள் பற்றி கேட்டதற்கு அந்தக் குழந்தைக்கு மிகை உணர்வுள்ள தோல் உள்ளதாகப் பொய் கூறி மறைத்துள்ளார்.
வலி தாங்க முடியாமல் அந்தக் குழந்தை தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு அழுதாலும், அந்த மாது அதைப் புறக்கணித்துள்ளார்.
இதற்காக அந்த 55 வயது சிங்கப்பூர் ஆசிரியருக்கு நேற்று 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, அந்த ஆசிரியரின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது.
குழந்தைகள், இளையர் சட்டத்தின்கீழ் குழந்தையை மோசமாக நடத்திய குற்றத்தை அவர் முன்பு ஒப்புக்கொண்டார். இதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டு தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டது.
இப்போது அந்தப் பாலர்பள்ளியில் பணியில் இல்லாத அந்த ஆசிரியருக்கு, 18 மாதங்கள் வரையிலான குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
குழந்தைகளுக்கு உணவளித்தல், 'நாப்கின்'களை மாற்றுதல், கல்வி விளையாட்டு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல் ஆகியவை அவரது கடமைகளில் அடங்கும்.
டிசம்பர் 24, 2019 அன்று, மதியம் 12.30 மணி முதல் 1 மணி வரை, ஆசிரியர் அந்தச் சிறுவனிடம் முரட்டுத்தனமாக பலமுறை நடந்துகொண்டுள்ளார்.
குழந்தையின் முதுகில் குறைந்தது 22 முறை அடித்தது, அவரது முகத்தை ஒரு சிறிய தலையணையைக் கொண்டு அறைந்தது, கன்னங்களில் அறைந்தது, தரையில் அவரை கடுமையாக அடிப்பதற்கு முன் அவரது கைகளை வலுக்கட்டாயமாக வேகமாக அசைத்தது ஆகியவை அந்த மாது புரிந்த குற்றச்செயல்களாகும்.
சிறிது நேரம் கழித்து, சிறுவனின் முதுகில் ஒரு பெரிய சிவப்பு திட்டு உருவாவதை ஆசிரியர் கவனித்தார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிவப்பு திட்டு நீல நிறமாக மாறியது.
சிறுவனின் தாயார் தன் மகனின் காயங்களைக் கவனிப்பார் என்பதை உணர்ந்த அவர், தாயாரின் சந்தேகத்தைத் திசை திருப்ப முற்பட்டார்.
சிறுவனின் தாயார் மகனை அழைக்க பாலர்பள்ளிக்கு வருவதற்கு முன் அவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை ஆசிரியர் அனுப்பினார்.
சிறுவனைத் தூங்க வைக்க அவனது முதுகில் சற்று வேகமாகத் தட்டியதால் அங்கு தோல் அழற்சி ஏற்பட்டதற்காக அந்த ஆசிரியர் தாயாரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அதற்கு அடுத்த நாள் அந்தத் தாயார் தன் மகனை கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுவனின் முதுகில் ஏற்பட்டுள்ள கடுமையான காயங்கள் விபத்தால் ஏற்பட்டதில்லை என்று மருத்துவர் கூறினார். சிறுவனின் மருத்துவமனைச் செலவான $139.10 தொகை யைப் பாலர்பள்ளி செலுத்தி விட்டது.
அந்தத் தாயார் பின்னர் பாலர்பள்ளியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, தனது குழந்தை கடுமையான காயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது.
அதன் தொடர்பில் தாயார் டிசம்பர் 31, 2019 அன்று மாவல் துறை யிடம் புகார் செய்தார்.
ஓராண்டு சிறைத்தண்டனையை கோரிய, துணை அரசு வழக்கறிஞர் ஜெரல்ட் டான், பாதிக்கப்பட்டவர் மிகவும் சிறியவர் என்றும் உடல் ரீதியாக தன்னை தற்காத்துக் கொள்ளவோ தாக்குதல் சம்பவம் பற்றி வெளியில் சொல்லவோ முடியாதவர் என்றார்.
ஒரு குழந்தையைக் கொடுமைப்படுத்தினால், குற்றம் புரிந்தவருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறையும் $4,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

