பெரியவர்கள் கல்வி கற்பதற்கான இடங்களை அதிகரிப்பது, கல்வி பற்றிய மனநிலையை மாற்றுவது, ஆகியன சிங்கப்பூரர்கள் புதிய வேலைகளுக்கான திறன்களை மேம்படுத்துவதற்கும் ஏற்கெனவே உள்ள வேலைகளை நிரப்புவதற்கும் ஒரு வழியை உருவாக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலை செய்யும் பெரியவர்களுக்கு இங்குள்ள பல்கலைக் கழகங்களில் கழிவுடன் கூடிய கல்விக் கட்டணத்தில் இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகம் உள்ளன.
இம்மாதம் 7ஆம் தேதி, கல்வி அமைச்சர் சான் சுன் சிங், கல்வியில் அதிக வாழ்நாள் கூட்டுப் பங்கேற்பு விகிதத்தின் சாத்தியத்தைக் கல்வி அமைச்சு ஆராயும் என்று அறிவித்தார்.
அப்படி என்றால், வேலை செய்யும் அதிகமான பெரியவர்கள் அரசாங்கத்தின் நிதியுதவி பெறும் பட்டப்படிப்பு திட்டங்களில் இடம்பெற அனுமதிப்பது குறித்து கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது என்று திரு சான் தனது அமைச்சின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது கூறினார்.
கல்வி அமைச்சின் வாழ்நாள் கூட்டுப் பங்கேற்பு விகிதத்திற்கு மாறும் இத்திட்டம் வாழ்நாள் கற்றலை ஊக்குவிப்பதற்கான சரியான திசையில் செல்லும் ஒரு வழியாகும் என்று சிங்கப்பூர் மனிதவளக் கழகத் தலைவர் லோ பெக் கெம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
பெரியவர்களுக்கான கழிவுடன் கூடிய கல்விக் கட்டண இடங்களை அதிகரிப்பது, வர்த்தகச் சான்றிதழ் போன்ற பிற வழிகளுடன், ஊழியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான கட்டமைக்கப்பட்ட பாதையை உருவாக்கும் என்றார் திருவாட்டி லோ.
இதற்கிடையே, இளைய சிங்கப்பூரர்கள் பிற்காலத்தில் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும், படிப்பதைத் தொடரலாமா அல்லது வேலையில் சேரலாமா என்பதில் அவர்கள் இன்னும் குழப்பநிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பட்டதாரிகளுக்கு நல்ல சம்பளம் ஈட்டும் வேலை கிடைப்பது சுலபமல்ல. பட்டப்படிப்புக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்திலிருந்து வருபவர்களுக்குச் சவாலாக இருக்கும். முதலில் வேலைச் செய்துவிட்டு பிறகு பட்டப்படிப்பைத் தொடங்கியதால் என்னால் சேமிக்கவும் வேலை அனுபவத்தைப் பெறவும் முடிந்தது," என்றார் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் காவல்துறை அதிகாரி த.சுந்தரேசன், 26.
"முதலில் உங்கள் பட்டப்படிப்பை முடிப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். எந்த வேலை செய்தாலும், அந்தத் துறையில் நாம் கைதேர்ந்தவராக விளங்கவேண்டும். அதற்குத் தேவையான அறிவையும் ஆற்றலையும் பெற பட்டப்படிப்பு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்," என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணக்கியல் பயிலும் முகமது ஃபட்சில், 22.
"காவல் துறை, ராணுவம் போன்ற சில துறைகளில் பணிபுரிய பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்ட துறையில் வேலை செய்ய விரும்புபவர்கள் முதலில் வேலை செய்து, அனுபவத்தை அதிகரித்துக்கொண்டு, பிறகு பட்டப்படிப்பு பயில செல்லலாம். இது அவர்களைக் குறுகிய காலகட்டத்தில் நல்ல நிலைக்குக் கொண்டு செல்லும். ஆனால், மருத்துவம், சட்டம், பொறியியல் ஆகிய துறைகளில் பணியாற்ற குறைந்தபட்சம் பட்டப்படிப்பாவது படித்திருக்கவேண்டும். இத்துறைகளில் பணியாற்ற விரும்புவோர் முதலில் பட்டப்படிப்பு பயில்வதை தவிர வேறு வழி இல்லை," என்றார் முழுநேர தேசிய சேவையாளர் லின்ஃபொர்ட் டேனியல், 22.
"பட்டப்படிப்பு மட்டும் சில துறைகளில் நாம் எதிர்பார்க்கும் மதிப்பைக் கொடுப்பதில்லை. அதற்கு வேலை அனுபவம் இன்றியமையாததாகும். எல்லா துறையும் ஒன்றல்ல. ஒருவரின் நிதி நிலைமை, பணிபுரிய விரும்பும் துறை, லட்சியம் என அனைத்தையும் பொறுத்து அவர்களின் கல்விப் பாதை அமையும். எனவே இத்திட்டத்தை அமல்படுத்துவது நன்மையளிக்கும் என நான் நம்புகிறேன்," என்று கூறினார் பொதுத் தொடர்புத் துறை முதுகலை பட்டதாரி நிஷ்மன் நாத் நாயர், 28.
"பலதுறைத் தொழிற்கல்லூரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. மேல்நிலை முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டம் பலதுறைக் கல்வி முடித்தவர்களுக்கும் முதலில் வேலை அனுபவத்தைப் பெற விரும்புபவர்களுக்கும் வழிவகுக்கிறது," என்றார் சுத்திகரிப்பு செயல்முறை தொழில்நுட்ப வல்லுநர் ஷா.ஷாஜஹான், 27.
கூடுதல் செய்தி:
கவின்விழி கதிரொளி

