தம்முடைய நான்கு மகள்களைக் கடந்த 14 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவருக்கு 33 ஆண்டுகள் 2 மாதச் சிறை தண்டனையும், 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது. நான்கு மகள்களில் மூவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
தண்டனை அளித்த நீதிபதி, இது மிகக் கொடுமையான பாலியல் வன்முறை, பாலியல் பலாத்காரச் சம்பவம் என்று குறிப்பிட்டார். தம்முடைய மகள்களின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டதாகவும், அவர்கள் இல்லத்தை நரகமாக்கியதாகவும் நீதிபதி டான் சியோங் தாய் கூறினார். அதோடு, பல ஆண்டுகளாக அவர்களுக்குச் சொல்லமுடியாத வேதனையும் வலியும் குற்றவாளி தந்திருப்பாக அவர் சொன்னார்.
45 வயதான குற்றவாளிக்கு ஏழு பிள்ளைகள். மகள்களைப் பாலியல் வன்முறை செய்ததோடு, அவர்களை உடல்ரீதியாகவும் கொடுமைபடுத்தியுள்ளார். மனைவி, இளைய மகன் ஆகியோரும் கொடுமைப்படுத்தப்பட்டனர்.
ஒரு சமயம் தமது மூன்று மகள்கள், இளைய மகன் ஆகியோருக்கு ஐந்து நாள்கள் சாப்பாடு கொடுக்கமால், வீட்டில் மின்சாரத்தைத் துண்டித்து அவர்களைக் கொடுமைப்படுத்தியுள்ளார்.
நவம்பர் 2018ஆம் ஆண்டு, பாதிக்கப்பட்ட ஒரு மகள் காவல் துறையிடம் புகார் செய்த பிறகுதான், குற்றவாளியின் வன்செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தண்டனை அளிக்கும்போது, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, மானபங்கம், சிறார் வன்கொடுமை உட்பட 26 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.


