அமைச்சர்: இதர நோயாளிகளால் மருத்துவமனைகளுக்கு நெருக்கடி குறையவில்லை
ஓமிக்ரான் தொற்று உச்சம் நிச்சயமாக முடிந்துவிட்டது. இருந்தாலும் கொவிட்-19 சாராத இதர நோயாளிகள் காரணமாக மருத்துவ மனைகளுக்கு சுமை இன்னமும் அகலவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 சூழல் பற்றிய புதிய தகவல்களை அவர் வெளியிட்டார். அன்றாட தொற்று எண்ணிக்கைகளைப் பார்க்கையில் ஓமிக்ரான் தொற்று உச்சத்தை தொட்டு குறையத் தொடங்கிவிட்டது என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் கூறினார்.
வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதமும் கிட்டத்தட்ட 0.7 ஆக இருப்பதை அவர் சுட்டினார்.
ஒரு சில நாட்களுக்கு முன் இந்த அளவு 0.9 ஆக இருந்தது.
கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இருந்தாலும்கூட மருத்துவமனைகள் இன்னமும் சுமையுடன்தான் செயல்படுகின்றன.
கொவிட்-19 சாராத இதர நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் தீவிர சிகிச்சைப் பிரிவை நாடுவதே இதற்கான காரணம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அப்படி நாடுவோரில் பெரும்பாலானவர்கள் முற்றிய நோய்களுடன் கூடியவர்கள்.
அந்த நோய்கள் கடந்த இரண்டாண்டுகளில் அவர்களுக்குப் பிரச்சினையாகிவிட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகளில், மருத்துவமனைகள் கொவிட்-19 நோயாளிகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதே இதற்கான காரணம் என்று அமைச்சர் விளக்கினார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோரில் 90% முதல் 95 விழுக்காட்டினர் முற்றிய நோய்களுடன் கூடிய அவசர கவனிப்பு தேவைப்படக் கூடியவர்கள்.
இவர்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினருக்கு கொவிட்-19 தொற்றுக்காகவும் சிகிச்சை வழங்க வேண்டி இருக்கிறது. எஞ்சிய 5% கொவிட்-19 சிறப்பு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்கள்.
இன்னும் இரண்டு வாரங்களில் சூழ்நிலை மேம்படும் என்று அமைச்சு நம்புவதாகவும் திரு ஓங் குறிப்பிட்டார். அரசாங்கம் அடுத்த கட்டமாக விதிமுறைகளைத் தளர்த்துவதற்குத் திட்டமிடுகிறது.
இந்த நிலையில், அது வார தொற்று எண்ணிக்கையையும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளின் எண்ணிக்கையையும் அணுக்கமாக கண்காணித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

