எல்லா மருத்துவமனைகளுக்கும் பராமரிப்பு விடுதிகளுக்கும் பொதுமக்கள் நேரடியாகச் செல்வதற்கான தடை ஏப்ரல் 3ஆம் தேதி வரை தொடரும் என்று சுகாதார அமைச்சு அறிவித்து இருக்கிறது.
அந்தத் தடை இம்மாதம் 20ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முன்னதாக அமைச்சு அறிவித்து இருந்தது.
இப்போது அந்தத் தடை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூரில் கடந்த வாரத்தில் கொவிட்-19 உள்ளூர் தொற்று படிப்படியாக குறைந்து இருக்கிறது. இருந்தாலும்கூட மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை.
ஆகையினால் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் இன்னமும் கணிசமான நெருக்கடியை எதிர்நோக்குகிறார்கள்.
ஆகையால், மருத்துவமனை, தாதிமை இல்ல ஊழியர்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக மருத்துவமனைகளுக்கும் விடுதிகளுக்கும் பொதுமக்கள் நேரடியாகச் செல்வதற்கான தடை அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று அமைச்சு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
இருந்தாலும் அசாதாரண நிலவரங்களைப் பொறுத்தவரை, தங்கள் விருப்பப்படி மருத்துவமனைகளும் விடுதிகளும் செயல்படலாம்.
அப்படி அனுமதிக்கப்படும் வருகையாளர்கள் நடப்பு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பது முக்கியமானது.
மருத்துவமனைகளும் விடுதிகளும் மாற்று தொடர்பு வழிகளில் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் அமைச்சு தெரிவித்து உள்ளது.
நோயாளிகள், தாதிமை வாசிகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நிலவரங்களைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு தரும்படி அமைச்சு கேட்டுக்கொண்டது.
சூழ்நிலைக்கேற்ப அரசாங்கம் நிலவரங்களைப் பரிசீலனை செய்து உரிய நடைமுறைகளை அமலாக்கும்.

