முரசொலி
தலைவலி போனபிறகு திருகுவலி வந்தால் ஓரளவுக்குச் சமாளிக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் சேர்ந்து வந்தால் என்ன பாடுபடவேண்டும் என்பதை இப்போது உலகம் காண்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா படுத்திய பெரும்பாடுகளைச் சமாளிக்க நாடுகள் இன்னமும் படாதபாடுபட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்து அடுத்த பிரச்சினையைக் கிளப்பிவிட்டு, ஏற்கெனவே உள்ள சிரமங்களை இமாலய சிரமமாக்கிவிட்டது. அதோடு, எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் சீனாவில் மீண்டும் தொற்று தலைதூக்கிவிட்டது.
கொவிட்-19 தொற்று ஏற்பட்டதால் பல நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடிவிட்டு தனித்து இருக்க வேண்டிய சூழல் உருவாகி, உலகம் முழுவதுமே பொருள், சேவை போக்குவரத்து, விநியோகக் கட்டமைப்பு ஆகியவை முடங்கிப்போனது.
அது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தபோது உக்ரேன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி படைஎடுத்துவிட்டது. கொரோனாவில் மக்கள் மாண்டது போதாது என்று உக்ரேனில் ரஷ்யா நடத்தும் தாக்குதல்-அதை எதிர்த்து உக்ரேன் அரங்கேற்றும் தீவிரமான மோதல் காரணமாக உயிருடற் சேதங்கள் வேதனை தரும் அளவுக்கு உள்ளன.
ரஷ்யா அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு. அதோடு மட்டுமல்ல, உக்ரேனும் ரஷ்யாவும் கோதுமை, மக்கா சோளத்தை உலகின் பல பகுதிகளுக்கும் ஆகஅதிகமாக ஏற்றுமதி செய்கின்றன.
உக்ரேனில் அடாவடித்தனத்தில் ரஷ்யா இறங்கி இருப்பதற்குப் பதிலடியாக அந்த நாட்டின் மீது அமெரிக்க, ஐரோப்பா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவும் பல்வேறு தடைகளை அதிக அளவுக்கு விதித்துள்ளன.
இதனால் ரஷ்ய எண்ணெய் உலக சந்தைக்கு வர இயலாத சூழல் ஏற்பட்டு உள்ளது. அதோடு முக்கியமான போக்குவரத்து வழித் தடங்களும் அடைபட்டுவிட்டதால் எண்ணெய் விலை ஏறிவிட்டது. எரிபொருளே பொருளியலுக்கு மிக முக்கிய அடைப்படை என்பதால் இதர விலைகளும் கூடிவிட்டன. கோதுமை, சோளம் வரத்து தடைபட்டதால் உணவுப் பொருள் விலை எகிறிவிட்டது.
சீனாவின் புதிய கொரோனா தொற்று நிலவரமும் இதற்கு உரமாக அமைந்துவிட்டது. அங்கு மீண்டும் கிருமி அதிகம் தலைகாட்டுவதால் பெரிய அளவில் முடக்கத்தை அமலாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு, செங்ஷான் போன்ற முக்கியமான உற்பத்தி, ஏற்றுமதி மையங்கள் முடங்கிவிட்டன. விநியோகக் கட்டமைப்பு மேலும் தடைபட்டுவிட்டது. உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரிக்க இந்த நிலவரமும் முக்கிய காரணமாகிவிட்டது.
சிங்கப்பூர் உலகுடன் அணுக்க தொடர்புகளைக் கொண்ட நாடு; உலக சந்தைகளைச் சார்ந்து இருக்கும் நாடு என்பதால் இந்த வெளித் தாக்குதல்களில் இருந்து தப்ப முடியவில்லை.
புற நிலவரங்களின் பாதக விளைவுகளை இங்கு ஏற்கெனவே நாம் உணரத் தொடங்கிவிட்டோம்.
உணவு, பெட்ரோல், பயனீட்டுப் பொருள்கள் விலை அதிகமாகி உள்ளன. உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள், உணவங்காடிக் கடைக்காரர்கள், டாக்சி, வாடகை கார் நிறுவனங்கள், தளவாடப் போக்குவரத்து, சில்லறை வர்த்தகம், உற்பத்தித்துறை நிறுவனங்கள் எல்லாம் செய்வதறியாது கையைப் பிசைகின்றன.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் கடந்த பிப்ரவரியில் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டன. சிங்கப்பூரில் மூலாதாரப் பணவீக்கம்-அதாவது தனியார் போக்குவரத்து, குடியிருப்புச் செலவுகளை நீக்கிவிட்டு கணக்கிடப்படும் பணவீக்கம்- 2012 செப்டம்பருக்கு பிறகு ஆக அதிகமாக 2.4 விழுக்காட்டை தொட்டுவிட்டது என்று அந்த அறிக்கை கூறியது.
கொரோனா தொற்றைப் பொறுத்தும் உலகளவில் ஏற்படக்கூடிய அதிர்ச்சி சம்பவங்கள் காரணமாகவும் இந்த ஆண்டு நடுப்பகுதி வாக்கில் பணவீக்கம் மேலும் கூடி 3 விழுக்காட்டை எட்டும் என்றும் அவை கணித்து இருந்தன.
இதுபோலவே இப்போது உக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பு காரணமாகவும் சீனாவில் மறுபடியும் தொற்று தலைதூக்குவதாலும் பணவீக்கம் கூடும் என்பது ஏறக்குறைய நிச்சயமாகிவிட்டது.
இதுபோன்ற உலக பாதக நிலவரங்கள் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது இப்போதைக்கு தெளிவாகத் தெரியவில்லை.
இத்தகைய ஒரு நிலையில், விலைவாசியை- அதாவது பணவீக்கத்தைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் உதவிகள் நிம்மதி பெருமூச்சுவிடும் அளவுக்கு இருப்பதாகத் தெரிகிறது.
விலை உயர்வு காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குடும்பங்கள் சமாளிக்க, புதிய வரவுசெலவுத் திட்டத்தில் கணிசமான அளவிற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. குறிப்பாக குறைந்த வருமான குடும்பங்களுக்குப் பல திட்டங்கள் இருக்கின்றன.
மேம்படுத்தப்பட்ட $6.6 பில்லியன் உத்தரவாதத் திட்டம்; மேம்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டம்; $560 மில்லியன் குடும்ப ஆதரவுத் திட்டம் ஆகியவை, குறைந்த வருமான குடும்பங்கள் விலைவாசி உயர்வைச் சமாளிக்க, சரியான நேரத்தில் தேவையான அளவுக்கு உதவும் என்பது திண்ணம்.
குடும்பங்களுக்கு மட்டுமின்றி தொழில்துறைக்கும் நிறைவான உதவி கிடைக்க $500 மில்லியன் வேலை, தொழில் ஆதரவுத் திட்டம் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் இருக்கின்றன.
உணவு, பானத் தொழில்துறை நிறுவனங்களுக்கும் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கும் கூடுதல் ஆதரவைத் தரும் வகையில் மார்ச் மாதம் 4ஆம் தேதி புதிதாக $70 மில்லியன் செயல்திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு உதவிகள் தேவைப்பட்டால் அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்பலாம்.
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) கூடுகிறது. அதைச் சாக்காக வைத்து அத்தியாவசியப் பொருள், சேவைகளின் விலையை அநியாயமான முறையில் சிலர் உயர்த்தக்கூடும்.
இதிலிருந்து பயனீட்டாளர்களைப் பாதுகாப்பதற்காகவே 'கொள்ளை லாபத் தடுப்புக் குழு' என்று குறிப்பிடப்படும் ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்போதைய சூழலில் மிக முக்கிய பங்காற்றும்; வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் அந்தக் குழு மிகப் பொருத்தமானதாக, அவசியமானதாகப் பார்க்கப்படுகிறது.
எல்லா புறச் சூழல்களையும் வைத்து கணிக்கையில் அதிகமான விலை உயர்வு தவிர்க்க இயலாதது என்பதை உணர்ந்து, தலைவலியோடு சேர்ந்து வந்துள்ள திருகுவலியையும் சமாளிக்க, விவேகமான அணுகுமுறையை சிங்கப்பூரர்கள் மருந்தாகப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

