செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e54de0ef-6d8c-457b-9c3e-6cbb63f9c2b2
-

வீடுகளில் உலோக உருளைகள் விழுவதாக புகார், விசாரணை

தங்கள் வீடுகளில் கடந்த சில மாதங்களாகவே உலோக உருளைகள் வந்து விழுந்திருப்பதாகவும் அதனால் சன்னல்கள், மேசை, நாற்காலிகளுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாகவும் ஈசூனில் உள்ள பல புளோக்குகளில் வசிப்போர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதல் இருந்து வருகிறது என்று ஈசூன் அவென்யூ 11ல் உள்ள 347ஏ புளோக்கில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார்.

தங்கள் வீட்டு சன்னல்கள், கதவுகள் சேதமடைந்து விட்டதாக அக்கம்பக்கத்தினர் ஒன்பது பேர் தெரிவித்த தாகவும் அந்த 40 வயது மாது கூறினார்.

இது பற்றி கருத்து தெரிவித்த நீ சூன் குழுத்தொகுதி எம்பிக்களில் ஒருவரான லூயிஸ் இங், புகார் பற்றி காவல்துறை விசாரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே, உலோக உருளை தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் விசாரணை நடந்து வருவதாகவும் காவல் துறை தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

திடலுக்குத் திரும்பிய

விளையாட்டு ஆர்வலர்கள்

சிங்கப்பூரில் கொவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, எளிமையாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட விளையாட்டு இடங்களில், குழு விளையாட்டுகளில் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட 30 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அணிக்கு 11 பேருடன் விளையாடப்படும் காற்பந்து, ஹாக்கி பொழுதுபோக்கு விளையாட்டுகள் இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக இப்போது அனுமதிக்கப்படுகின்றன.

விளையாட்டு பிரியர்கள் மிக விருப்பமுடன் திடல் களுக்குத் திரும்பி இருக்கிறார்கள்.

செயிண்ட் வில்ஃபிரட் திடலில் நேற்று காற்பந்து பொழுதுபோக்கு விளையாட்டு நடந்தது. அதேபோல் செங்காங் ஹாக்கி திடலில் ஆக்டிவ்எஸ்ஜி ஹாக்கி பயிலக வீரர்களுக்கான பயிற்சி இடம்பெற்றது.

அங்கு 20க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள் பயிற்றுவிப்பாளர்கள் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆக்டிவ்எஸ்ஜி கிண்ண காற்பந்து, கூடைப்பந்து இறுதிப் போட்டிகளும் நடந்தன.

சிராங்கூன் விளையாட்டு அரங்கில் நடந்த காற்பந்து இறுதிப்போட்டிக்கு வந்திருந்த கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், விளையாட்டு என்பது மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றலைக் கொண்டது என்றார். விளையாடி மகிழவும் விளையாட்டின் மூலம் அணுக்க பிணைப்பை பேணி வளர்க்கவும் சிங்கப்பூரர் களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறையும் கொவிட்-19 தொற்று

சிங்கப்பூரின் வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து 17ஆவது நாளாக ஒன்றுக்கும் குறைவாக வெள்ளிக்கிழமை 0.70 பதிவானது. அதற்கு முந்திய நாளான வியாழக்கிழமை இந்த விகிதம் 0.73ஆக இருந்தது.

வெள்ளிக்கிழமை புதிதாக 10,594 பேருக்குத் தொற்று உறுதியானது. முந்திய நாளில் 10,713 பேருக்குத் தொற்று இருந்தது. அன்று நண்பகல் நிலவரப்படி 1,175 பேர் மருத்துவமனைகளில் இருந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்கள் 30 பேர். 137 பேருக்கு உயிர்வாயு தேவைப்பட்டது. வெள்ளிக்கிழமை கொவிட்-19க்கு ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டனர்.