சிங்கப்பூர் திடல்தடச் சங்கம் நேற்று ஏற்பாடு செய்த அனைவருக்குமான 5,000 மீட்டர் பெருநடை நிகழ்ச்சியின்போது மயங்கி விழுந்த 50 வயது ஆடவர் மரணமடைந்தார்.
பெருநடை தொடங்கியதும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்த நிலையில் அவர் தரையில் விழுந்துவிட்டதாகத் தெரிகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று குறிப்பிட்டது. காலாங்கில் ஹோம் ஆஃப் அத்லடிக்ஸ் தடத்தில் இருந்த மருத்துவ சேவையாளர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர்.
மருத்துவ வாகனம் விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. டான் டோக் செங் மருத்துவமனையில் அந்த ஆடவர் மரணமடைந்துவிட்டார்.
அந்த நிகழ்ச்சியின் தொடக்கப் பட்டியலைப் பார்க்கும்போது, நான்கு பேர் பற்றிய விவரங்கள் அதில் இருந்தது.
அவர்களில் மூவருக்கு 18 வயது. மற்றொருவருக்கு 50 வயது. அந்த ஆடவரின் பெயர் லிம் பூன் ஹுவாட் என்று இருந்தது.
தனிநபர் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஆயத்தமான திடல்தட விளையாட்டு வீரர் ஒருவர் இது பற்றி கருத்து கூறியபோது மற்றவர்களும் தானும் திடலில் பரபரப்பு நிலவியதைக் காண முடிந்தது என்றும் மருத்துவ ஊழியர்கள் ஒரு தடத்தை நோக்கி ஓடியதைத் தாங்கள் பார்த்ததாகவும் கூறினார்.
ஆனால் சொந்த நிகழ்ச்சியில் தங்கள் கவனம் இருந்ததால் அங்கு என்ன நடந்தது என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்றார் அவர்.

