அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு நேரடி விமான சேவையைச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் தொடங்கவுள்ளது. இம்மாதம் 28ஆம் தேதி சேவை தொடங்கும்.
அமெரிக்காவுக்கு விடிஎல் எனப்படும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டம் சென்ற அக்டோபர் மாதம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் நகருக்குச் செல்ல அதிகமானோர் விருப்பம் தெரிவித்து வருவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. இதனால் விமானச் சேவைகளை அதிகரிக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
வாரந்தோறும் சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் 57 சேவைகளை நிறுவனம் வழங்கிவந்தது. தொற்றுப் பரவல் சூழ்நிலையில் இந்த எண்ணிக்கை மூன்றுக்குக் குறைந்தது. தொற்றுப் பரவலுக்கு முன் இருந்த சேவை எண்ணிக்கையை ஜூன் மாதத்துக்குள் செயல்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதோடு, கனடாவின் வான்குவர் நகருக்கு நிறுவனம் மீண்டும் சேவையைத் தொடங்கவுள்ளது. இந்தச் சேவையையும் சேர்த்துக்கொண்டால், வட அமெரிக்கப் பகுதிக்கு வாரந்தோறும் 62 சேவைகள் இருக்கும்.
சிங்கப்பூர் அதன் எல்லைகளைப் படிப்படியாக திறக்கும் நிலையில், ஆசியாவுக்கும் அமெரிக்காவும் இடையே இணைப்புச் சேவைகளை வழங்கும் ஒரு முக்கிய மையமாக விளங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விருப்பம் கொண்டுள்ளது.