ஜெர்மனியில் சிங்கப்பூர் ஆயுதப் படைப் பயிற்சி
சிங்கப்பூர் ஆயுதப் படை, ஜெர்மனியில் நடைபெறும் 'எக்சர்சைஸ் பான்சர் ஸ்ட்ரைக்' ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சிங்கப்பூருக்கும் ஜெர்மனிக்கும் இடையே இருந்துவரும் சிறந்த தற்காப்பு உறவை மறுவுறுதிப்படுத்தும் வகையில் இந்தப் பயற்சி அமைந்துள்ளது.
'ஒம்டா' எனும் ஒபர்லாவ்சிட்ஸ் ராணுவப் பயிற்சிப் பகுதியில் 'எக்சர்சைஸ் பான்சர் ஸ்ட்ரைக்' பயிற்சி நடைபெறுகிறது. தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது அங்கு சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்தார்.
'ஒம்டா'வின் பரப்பளவு, சிங்கப்பூரின் பரப்பளவில் கால் பங்கு. அங்கு கூடுதல் சவாலான மேலும் பெரிய அளவிலான பயிற்சிகளை மேற்கொள்ளமுடியும் என்று திரு ஸாக்கி கூறினார்.
"தற்போதிருக்கும் தற்காப்பு நிலவரத்தைக் கருத்தில்கொள்ளும்போது சிங்கப்பூர் ஆயுதப் படை போர்க்கால அடிப்படையில் தயாராய் இருக்க முழுமைத் தற்காப்பின் அவசியம் நமக்கு நினைவூட்டப்படுகிறது," எனத் திரு ஸாக்கி குறிப்பிட்டார்.
12வது ஆண்டாக 'எக்சர்சைஸ் பான்சர் ஸ்ட்ரைக்' பயிற்சி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி ஓராண்டில் வசந்தம், இலையுதிர் காலங்களில் இரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
7,859 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்
சிங்கப்பூரில் நேற்று 7,859 புதிய கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சென்ற மாதம் ஏழாம் தேதிக்குப் பிறகு நேற்றுதான் புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை ஆகக் குறைவாகப் பதிவானது.
வாராந்திர கிருமித்தொற்று விகிதம் 0.71ஆகப் பதிவானது. தொடர்ந்து 19வது நாளாக வாராந்திர கிருமித்தொற்று விகிதம் ஒன்றுக்குக் குறைவாகப் பதிவானது. கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் 1,065 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நால்வர் மரணமடைந்தனர்.
23 பேர் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 139 பேருக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்பட்டது.
சுகாதார அமைச்சு தினமும் வெளியிடும் கிருமித்தொற்று தகவல்களில் இந்த விவரங்கள் இடம்பெற்றவை.

