இரண்டு வேலை மோசடிச் சம்பவங்களின் தொடர்பில் எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்தச் சம்பவங்கள், 'பொன்சை' பாணி மோசடிச் சம்பவங்களைப் போல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
'பொன்சை' மோசடியில் முதலில் ஏமாற்றப்படுவர்களுக்குப் பணம் தரப்படும் என்று ஏமாற்றுக்காரர்கள் கூறுவர்.
அதற்குப் பிறகு மோசடியில் சிக்குவோரிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்திலிருந்து ஏற்கெனவே ஏமாற்றப்பட்டவர்களுக்குத் தொகை வழங்கப்படும்.
இந்தப் பாணியில் வேலை வழங்குவதாக நம்பிக்கை தந்து பணம் பறிக்கப்பட்டது.
'இ-கொமர்ஸ் அஃபிலியேட் பிஸ்னஸ்' எனும் தளத்தைப் பயன்படுத்தி ஒரு மோசடிச் செயல் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்பில் 18லிருந்து 26 வயதுக்கு உள்பட்ட ஐந்து ஆண்களைக் கைதுசெய்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
தங்களின் சிங்பாஸ் விவரங்களைப் பிறருக்குத் தெரியப்படுத்தியாகக் கைதான ஐவரில் நால்வர் மீது இன்று குற்றச்சாட்டு சுமத்தப்படும். மோசடிச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட தொகையை நல்ல பணமாக்க சம்பந்தப்பட்ட சிங்பாஸ் விவரங்களைக் கொண்டு வர்த்தகங்களுக்கான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
மற்றொரு சம்பவத்தின் தொடர்பில் 26லிருந்து 30 வயதுக்கு உள்பட்ட மூன்று ஆண்களைக் காவல்துறை கைதுசெய்தது.
போலியான ஒரு நிறுவனத்தின் மூலம் வேலை வழங்கப்படும் வாய்ப்பிருப்பதாக நம்பிக்கை தந்து நிகழ்த்தப்பட்ட ஒரு மோசடிச் செயலுடன் இவர்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இவ்விரு சம்பவங்களின் தொடர்பிலும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 10லிருந்து 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

