விடியற்காலை மூன்று மணிக்கு வந்த அழைப்பு நெருங்கிய நண்பரின் இழப்பை ரமேஷுக்கு அறிவித்தது (உண்மை பெயரல்ல). இது கனவாக இருக்கக்கூடாதா என்றே அவர் நினைத்தார்.
2020ஆம் ஆண்டில் தம்முடைய நண்பரை இழந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார் ரமேஷ், 20.
அவரின் கடைசி நாட்களில் சிறிய மனக்குறையினால் அவரிடம் கடைசிவரை பேச முடியாமல் போனது இன்னும் தன் மனதை உறுத்துவதாக ரமேஷ் பகிர்ந்துகொண்டார்.
தம்மிடமோ சக நண்பர்களிடமோ அந்த நண்பர் அவரது பிரச்சினைகளைப் பகிர்ந்து இருந்தால், அவர் இன்று தங்களுடன் இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணமும் ரமேஷை வாட்டுகிறது.
"தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் நாங்கள் ஒருவர் மற்றொருவருடன் பகிர்ந்துகொள்வோம். முன்பு நாங்கள் ஒன்றாகச் செய்தவற்றை எல்லாம் இப்போது செய்யும்போது அவன் உடன் இல்லாதது வருத்தமாக உள்ளது," என்றார் ரமேஷ்.
உற்ற தோழனை இழந்த அதே ஆண்டு ரமேஷ் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினார். தூக்கமில்லாத நிலையில் தவித்த அவருக்கு, குரல்கள் கேட்பது போன்ற மாயை ஏற்பட்டது.
நண்பரின் நினைவு வரும்போதெல்லாம் நண்பர்கள் சேர்ந்து அவர் இடம்பெற்ற காணொளிகளைப் பார்ப்பார்கள்.
துயரிலிருந்து மீண்டு கல்வியில் கவனம் செலுத்த ரமேஷுக்கு ஓராண்டுக்கு மேல் ஆனது.
தமது ஆதங்கத்தைப் பெற்றோரிடம் பகிர்ந்துகொண்ட ரமேஷுக்கு அவர்கள் கூறிய ஆறுதல், இக்கட்டான சூழலில் கைகொடுத்தது.
எவ்வித சங்கடம் ஏற்பட்டாலும் நண்பர்கள் அதனை உடனே தீர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை எதிர்பாராத முறையில் இயங்குகிறது என்று உணர்ந்ததாகக் கூறினார் ரமேஷ்.
மனவுளைச்சலைச் சமாளிக்கப் பல்வேறு வழிகள் உள்ளன என்பதையும் உதவி நாடத் தயங்கக்கூடாது என்பதையும் கண்கூடாக உணர்ந்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.

