இளையர்களின் மேம்பாட்டில் கைகொடுக்கும் பொருட்டு நிறுவப்பட்டது 'இம்பார்ட்' என்ற லாப நோக்கமற்ற அமைப்பு. சிங்கப்பூர் இளையர்களுக்கு வழிகாட்ட முற்படும் இந்த அமைப்பு இதுவரை முந்நூற்றுக்கும் மேற்பட்ட இளையர்களுக்கு உதவியுள்ளது.
"வாழ்வில் நம்பிக்கை இழப்பது என்பது மிக ஆபத்தான நிலை. நாளைப் பொழுதைக் கற்பனை செய்து பார்க்க முடியாத நிலையில் உள்ள இளையர்கள் ஆபத்தான முடிவுகளை எடுக்கத் துணிகின்றனர். இழந்த நம்பிக்கையை அவர்களுக்குள் மீண்டும் ஏற்படுத்துவது என்பது மிகக் கடினமானது," என்றார் இம்பார்ட் அமைப்பின் நிறுவனர் நாராஷ் நரசிம்மன், 39 (படம்).
இருபது ஆண்டுகளாக இளையர்களைப் பேணும் சமூகப் பணியைச் செய்து வந்த திரு நாராஷ், தம்முடைய நண்பருடன் சேர்ந்து இந்த அமைப்பை 2015ஆம் ஆண்டில் உருவாக்கினார்.
'சின்க்' என்ற இளையர் மனநலத் திட்டம் இந்த அமைப்பின் மூன்று கிளைகளில் ஒன்றாகும்.
சக இளையர்களுக்கு உதவுவதற்கான பயிற்சிகளை 'சின்க்' திட்டத்தில் இணையும் இளையர்களுக்கு வழங்குகிறது இம்பார்ட்.
மேலும், இளையர்கள் தங்களது சொந்த மனநலப் பிரச்சினைகளைக் களைவதற்கான தெளிவை ஏற்படுத்தவும் அந்த அமைப்பின் திட்டங்கள் வழிகாட்டுகின்றன. பாதிக்கப்பட்ட இளையர்கள் இலவசமாக மனநல ஆலோசகர்களை நாடுவதற்கும் இம்பார்ட் உதவுகிறது.
"மனநலம் பற்றிய உரையாடல்களில் இளையர்களின் குரலைவிட அவர்களைச் சுற்றியுள்ளோரின் குரலே ஓங்குகிறது. தங்களது கவலைகளோடு முன்வரும் தைரியத்தையும் அதை எதிர்நோக்கும் உறுதியையும் அளிக்க நாங்கள் முற்படுறோம்," என்றார் திரு நாராஷ்.

