விருந்தோம்பல் துறையில் வாழ்க்கைத் தொழிலைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு புதிய கல்வித் தகுதி வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.
உலகின் தலைசிறந்த விருந்தோம்பல் பள்ளியுடன் சேர்ந்து அத்தகைய வாய்ப்பை சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐடிஇ) வழங்கவிருக்கிறது.
சுவிட்சர்லாந்தின் 'இஎச்எல்' எனும் முன்னணி விருந்தோம்பல் மற்றும் வர்த்தகப் பள்ளியுடன் இணைந்து விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகத் துறையில் புதிய பட்டயப் படிப்பை வழங்குவது குறித்து ஐடிஇ ஆராய்ந்து வருகிறது.
இம்மாதத் தொடக்கத்தில் இதற்கான ஒப்பந்தத்தில் இரு கல்விக் கழகங்களும் கையெழுத்திட்டுள்ளன.
இது தொடர்பான விவரங்களை நேற்று வெளியிட்ட கல்வி அமைச்சர் சான் சுன் சிங், விருந்தோம்பல் துறையில் வேலை வாய்ப்பைப் பெற விரும்புவோருக்கு இந்தப் புதிய பட்டயப் படிப்பு கைகொடுக்கும் என்றார்.
சுவிட்சர்லாந்தின் விருந்தோம்பல் கல்வியுடன் ஐடிஇயின் தனித்து வமான கற்றல் அணுகுமுறையில் பட்டயப் படிப்பு வழங்கப்படும் என்றார் அவர்.
புதிய பட்டயப் படிப்பை முடித்தவர்கள், விநியோகச் சங்கிலி, வசதி களை நிர்வகிக்கும் திறன்களையும் தற்போது தேவைப்படும் வர்த்தகப் பகுப்பாய்வு மற்றும் நீடித்த விருந்தோம்பல் நடைமுறைகள் போன்ற புதிய திறன்களையும் பெற்று வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ள தயாராக இருக்க முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
விருந்தோம்பல், சேவைத் துறையில் பல்வேறு பணிகளில் ஈடுபடவும் அது வாய்ப்பு அளிக்கும் என்று அவர் கூறினார்.
ஆனால் புதிய பட்டயப்படிப்பு எப்போது தொடங்கப்படும், எத்தனை மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
சிங்கப்பூரின் உயர் கல்வியில் 'இஎச்எல்' எப்படி முக்கியப் பங்காற்ற முடியும் என்பதற்கு புதிய பட்டயப் படிப்பு ஓர் உதாரணம் என்று அமைச்சர் சான் மேலும் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இஎச்எல்லின் முதல் அனைத்துலக வளாகத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் அமைச்சர் சான் பேசினார்.
உலகின் பிரபலமான விருந்தோம்பல் பள்ளியான இஎச்எல்லின் மூன்று வளாகங்களில் 4,000 மாணவர்கள் படிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தில் இரண்டு வளாகங்கள் செயல்படுகின்றன.
மூன்றாவது வளாகம் தற்போது சிங்கப்பூரில் தொடங்கப்பட்டு உள்ளது.

