சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பெருங்குடல் (மலக்குடல்) சோதனைக்காக ஐந்து மாதங்கள் காத்திருக்க நேரிட்டதால் நோயாளி ஒருவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் நலத்தைக் காப்பாற்றியுள்ளார்.
திருமதி டான், 73 (உண்மைப் பெயர் அல்ல) மலத்தில் ரத்தம் காணப்பட்டதால் கடந்த ஆண்டு ஜனவரியில் அரசாங்க பலதுறை மருந்தகத்துக்குச் சென்றுள்ளார். மலச்சிக்கலாலும் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு செரிக்க உதவும் மருந்துகள் பலனிக்கவில்லை.
பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அவருக்கு பெருங்குடல் சோதனை நடத்த சிங்கப்பூர் பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் பெருங்குடல் சோதனை செய்ய அவருக்கு தேதி வழங்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு தெரிவித்தது.
புற்றுநோய்க்கு அஞ்சிய அவர் அவ்வளவு மாதங்கள் காத்திருக்க விரும்பவில்லை. உடனடியாக மவுண்ட் எலிசபெத் நொவீனா சிறப்பு சிகிச்சை நிலையத்தில் உள்ள கல்லீரல், இரைப்பை, குடல் நோய் நிபுணரான மெஸ்மண்ட் வாய் என்பவரை அவர் அணுகினார்.
ஒரு வாரத்திற்குள் பிப்ரவரி 3ஆம் தேதி அவருக்கு பெருங் குடல் சோதனை செய்யப்பட்டது.
அவர் பயந்தபடியே அவருக்கு புற்றுநோய் இருப்பதை சோதனை முடிவுகள் காட்டின. பெருங்குடல் புற்றுநோய் முற்றியிருந்தது மட்டுமல்லாமல் கல்லீரலுக்கும் பரவியிருந்தது.
பொது மருத்துவனையில் சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறுவதற்கு சோதனை முடிவு களுடன் பலதுறை மருந்தகத்துக்குத் திரும்பிச் செல்லுமாறு டாக்டர் வாய் அவரிடம் யோசனை கூறினார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இதர நோயாளிகளையும் அவ்வாறு பொது மருத்துவமனைக்கு அனுப்பியிருப்பதாகவும் அங்கு அவர் களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.
ஆனால் ஒற்றையரான திருமதி டானுக்கு அடிப்படை மெடிஷீல்ட் லைஃப் (காப்புறுதி) மட்டுமே உள்ளது. அவருக்கு அந்தச் சமயத்தில் கல்லீரலிலும் கட்டி இருந்தது.
ஐந்து மாதங்கள் தாமதித்திருந்தால் மேலும் பல கட்டிகள் உரு வாகியிருக்கலாம் என்று மருத்துவர் வாய் சொன்னார்.
இந்த நிலையில் திருமதி டானின் உடன்பிறந்தவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் திருமதி டான் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் செலவுகளை ஏற்றுக் கொள்ளவும் முன்வந்தனர்.
இதையடுத்து மவுண்ட் ஆல்வர்னியா மருத்துவமனையில் ஆறு படுக்கைகளைக் கொண்ட அறையில் மலிவான கட்டணத்தில் சிகிச்சை பெறலாம் என்று மருத்துவர் பரிந்துரைத்தார்.
அதன்படியே திருமதி டானும் சிகிச்சை பெற்றுக்கொண்டார். இதற்கு 50,000 வெள்ளி முதல் 60,000 வெள்ளி வரை செலவானது. மெடிஷீல்ட் லைஃப் மூலம் ஒரு பகுதி கட்டணத்தை மட்டுமே ஈடுகட்ட முடிந்தது.
கல்லீரல், பெருங்குடலில் இருந்த கட்டிகளை சுருங்கச் செய்வதற்காக அவருக்கு சில சுற்று 'கீமோதெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது திருமதி டான் நல்ல உடல்நிலையில் உள்ளார். புற்றுநோய் பரவுவதற்கான அறிகுறிகளும் இல்லை.

