சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் பருவநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை எட்டும் முயற்சிகளில் கைகோத்துச் செயல்பட இணங்கியுள்ளன. அதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு நேற்று கையெழுத்தானது.
சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், இந்தோனீசியாவின் கடல்துறை மற்றும் முதலீட்டு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுட் பின்சார் பஞ்சாய்த்தான் இருவரும் அந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.
தூய்மையான தொழில்நுட்பத்துக்கான ஆய்வு, நிலத்திலும், நீரிலும் காணப்படும் வெவ்வேறு சுற்றுச்சூழல் கட்டமைப்புகள் தொடர்பான முன்னோடித் திட்டங்கள் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அது வழிவகுக்கும். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்கீழ் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து இருதரப்பும் அவற்றின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் அது வகைசெய்யும்.
புதிய உடன்படிக்கையின்கீழ் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் நான்கு முக்கியத் துறைகளில் ஒத்துழைக்கவிருக்கின்றன. கரிய விலை மற்றும் சந்தை, இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அணுகுமுறை, தூய்மையான தொழில்நுட்பமும் தீர்வுகளும் மற்றும் பசுமை நிதி ஆகியவை அவை.
இந்த ஆண்டு ஜனவரியில் இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்தப் புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில், முன்னோடித் திட்டங்கள் உள்ளிட்ட செயலாக்கத் திட்டம், ஆய்வு ஒத்துழைப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவை உருவாக்கப்படும்.
இந்த வட்டாரத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவல்ல புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் தீர்வுகள் குறித்தும் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் ஆராயும்.
நேற்று கையெழுத்தான புரிந்துணர்வுக் குறிப்பு, புதிய மேம்பாட்டு வாய்ப்புகளையும், வேலைகளையும் உருவாக்கும் என்று மூத்த அமைச்சர் டியோ கூறினார். இந்த இருதரப்பு ஒத்துழைப்பு முயற்சியில் அரசாங்க அமைப்புகள், தனியார் துறை, கல்வி நிலையங்கள் ஆகியவை ஈடுபடுத்தப்படும் என்றார் அவர்.
ஜி-20 கட்டமைப்பின்கீழ், இந்தோனீசியா நிதிக் கூட்டணியை உருவாக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் லுஹூட் தெரிவித்தார். பலதரப்பு அனைத்துலக நிலையமான அது, பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களையும் நிதியையும் ஒருங்கிணைத்து ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நீடித்த நிலைத்தன்மை இலக்குகளை அடைவதற்குப் பணியாற்றும் என்றார் அவர்.
அத்துடன், இந்தோனீசியாவின் உணவுப் பேட்டைத் திட்டத்தில் இணைந்துகொள்ளும்படி சிங்கப்பூருக்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார். இப்போதுள்ள விளைநிலங்களில் உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் அந்தத் திட்டம், உணவுப் பாதுகாப்பை அதிகரிக்க புதிய வேளாண்நிலங்களை உருவாக்கவும் முனைகிறது. புதிய உடன்படிக்கையின்கீழ், கரியத்துக்கான விலை நிர்ணயிப்பு தொடர்பிலும் இரு நாடுகளும் கூட்டாகப் பணியாற்றும்.
பருவநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை எட்ட சிங்கப்பூர்-இந்தோனீசியா கூட்டு முயற்சி

