நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 'பாமாயில்' எனும் செம்பனை எண்ணெய்க்கு மாற்றாக நுண்பாசியில் இருந்து தயாரிக்கப்படும் புதுவித எண்ணெய்யைக் கண்டுபிடித்துள்ளனர்.
மலாயா பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து சிங்கப்பூர் ஆய்வாளர்கள் அதனைக் கண்டுபிடித்துள்ளனர். நீடித்த நிலைத்தன்மையான முறையில் எண்ணெய் தயாரிக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவும்.
உலகின் மிகப் பிரபலமான தாவர எண்ணெய்யாக விளங்குகிறது 'பாமாயில்'. 2018ல் உலக அளவில் கிட்டத்தட்ட 77 மில்லியன் டன் 'பாமாயில்' தயாரிக்கப்பட்டது. 2024ல் இந்த அளவு 107.6 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இருப்பினும் செம்பனை எண்ணெய் மரங்களை அதிகம் பயிரிடுவதற்காக சில நாடுகளில் மிகப் பெரிய அளவில் வனப் பகுதிகள் அழிக்கப்படுகின்றன. இதனால் அதிகமான பசுமைக்கூட வாயுக்கள் காற்றில் கலப்பதுடன் வனவிலங்குகளின் வாழ்விடங்களும் அழிக்கப்படுகின்றன.
சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள நுண்பாசி எண்ணெய் 'பாமாயிலைக்' காட்டிலும் அதிக ஊட்டச்சத்து மிக்கது என்று கூறப்படுகிறது. ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதயநோய், பக்கவாதம் ஆகியவை ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்கவும் இந்த எண்ணெய் உதவும்.
தற்போது கடைகளில் விற்பனையாகும் 100 கிராம் அளவிலான சாக்லெட் பட்டையைத் தயாரிக்க, 160 கிராம் எடையுள்ள நுண்பாசி தேவைப்படும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
நுண்பாசி எண்ணெய்யைத் தயாரிக்கும் முன்னர் பைருவிக் அமிலம் எனப்படும் ரசாயனப் பொருள் நுண்பாசியில் சேர்க்கப்படும். பின்னர் அதன்மேல் புற ஊதாக் கதிர்கள் செலுத்தப்படும். இதனால், தாவரங்கள் உணவு உற்பத்தி செய்யும் நடைமுறையான ஒளிச்சேர்க்கை தூண்டப்படுகிறது.
14 நாள்களுக்குப் பிறகு நுண்பாசியைக் கழுவி, உலரவைப்பர். அதன்பிறகு நுண்பாசிப் புரதத்தில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படும்.
ஆய்வுக்குழு, நுண்பாசியில் இருந்து புரதச் சத்து, மாவுச் சத்து போன்றவற்றைப் பிரித்து எடுப்பதற்கான பசுமைத் தொழில்நுட்ப வழிமுறைகளையும் உருவாக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், முழுச் செயல்முறையிலும் கழிவுகள் மிகக் குறைவாகவே இருக்கும். அல்லது கழிவுகள் அறவே இருக்கமாட்டா.

