ரொட்டி, 'பீர்' ஆகியவற்றின் தயாரிப்பில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 'ஈஸ்ட்' எனும் நுண்ணுயிரி, இனி நினைவாற்றல் குறைபாடு மற்றும் பார்கின்சன்ஸ் நோய் ஆகியவற்றுக்கான மருந்துத் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கவிருக்கிறது.
சிங்கப்பூரையும் பிரிட்டனையும் சேர்ந்த ஆய்வாளர்கள், நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய வகையில் அந்த மருந்துகளைத் தயாரிப்பதற்கான புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். மிகச் சிறிய அந்த பூஞ்சைக் காளானின் மரபணுவில் மாற்றம்செய்து மருந்துகளைத் தயாரிப்பதற்கான முக்கியப் பொருளைப் பிரித்தெடுக்கும் முறையை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
டி-லிசெர்ஜிக் அமிலம் (டிஎல்ஏ) எனப்படும் அந்த முக்கியப் பொருள், மனித நரம்பு மண்டலத்தில் உணர்வுகளைக் கடத்தும் ரசாயனப் பொருள்களைப் போன்றே இருப்பதால், நரம்பியல் தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் அது சேர்க்கப்படுகிறது.
பாரம்பரிய முறையில், கோதுமை போன்ற தானியங்களில் வளரும் 'எர்காட்' எனும் பூஞ்சைக் காளானில் இருந்தே அது பிரிக்கப்படுகிறது. ஆனால், அந்த முறையில் உணவுப் பொருள் விளைச்சலுக்கான விளைநிலம் வீணாவதாகக் கூறினார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் இணைப் பேராசிரியரும், புதிய ஆய்வின் துணைத் தலைமை ஆய்வாளருமான இயூ வென் ஷான்.
மேலும், 'எர்காட்'டைத் தயாரிப்பு வானிலையைப் பெரிதும் சார்ந்திருப்பதை அவர் சுட்டினார். அது இதர உணவு தானிய விளைநிலங்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியமும் உண்டு.
எனவே, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆய்வாளர்கள் அதன் மரபணுவைச் செயற்கையாக ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்து அதை 'ஈஸ்ட்டில்' செலுத்துகின்றனர். பின்னர் அதனுடன் நொதித்தலுக்காக, 'கேலக்டோஸ்' எனும் சர்க்கரைப் பொருள் சேர்க்கப்படும். ஓரிரு நாள்களில், 'டிஎல்ஏ' தயாராகிவிடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கண்டுபிடிப்பு அறிவியல் சஞ்சிகையான நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் சென்ற மாதம் வெளியானது.
புதிய வழிமுறை விரிவுபடுத்தப்பட்டால் ஆண்டுக்கு ஏறத்தாழ ஐந்து டன் 'டிஎல்ஏ' தயாரிக்க முடியும். உலக அளவில் ஆண்டுக்கு பத்து முதல் பதினைந்து டன் வரையான 'டிஎல்ஏ' தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

