அமெரிக்க ஆகாயப் படைப் போர்ப் பயிற்சியில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை விருது வெல்ல உறவினர்கள் இருவர் உதவினர்.
அமெரிக்காவில் இருக்கும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படைப் பிரிவில் ஆகாயப் படை பொறியாளர்களாக ராணுவ நிபுணர் 2 கிம் குவோ சியோங்கும் ராணுவ நிபுணர் 2 கிம் வெய் லோங்கும் உள்ளனர்.
இருவரும் இணைந்து சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படைக்குச் சொந்தமான போர் விமானங்கள் போருக்குத் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்கின்றனர்.
தங்களுக்கிடையிலான ரத்த பந்தம் ஒன்றிணைந்து செயல்படுவதை மேம்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அன்றாடப் பணிகள், அமெரிக்க ஆகாயப் படை அண்மையில் நடத்திய பன்னாட்டு ஆகாயப் போர்ப் பயிற்சி ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட தங்களுக்கிடையிலான உறவு கைகொடுத்ததாக அவர்கள் கூறினர். அண்மைய போர்ப் பயிற்சியில் ஆகச் சிறந்த போர் விமானப் பராமரிப்புப் பிரிவுக்கான விருதை சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை வென்றது.
இந்த வெற்றிக்கு இவ்விருவரும் முக்கிய பங்காற்றினர்.
"பராமரிப்புப் பிரிவின் தலைவர் என்ற முறையில் போர் விமானங்கள் தயார்நிலையில் இருப்பதை நான் உறுதி செய்ய வேண்டும். போர்ப் பயிற்சியின்போது தினந்தோறும் இதைத்தான் நான் செய்கிறேன்," என்று இணையம் மூலம் நடத்தப்பட்ட நேர்காணலில் அமெரிக்காவில் இருக்கும் 27 வயது கிம் வெய் லோங் கூறினார்.
"வெடிமருந்துகளைத் தயார்
நிலையில் வைத்திருப்பது எனது பணியாகும். போர் விமானம் எத்தகைய பணியை நோக்கிச் செல்வகிறது என்பது குறித்து எனது உயர் அதிகாரிகள் என்னிடம் தெரிவிப்பர். அதற்கு ஏற்ப தேவையான ஏற்பாடுகளைச் செய்ய எனது குழுவை வழிநடத்துவேன்.
"எனவே, வெய் லோங்குடன் அடிக்கடி இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். அவர்தான் போர் விமானத்தை தயார்நிலையில் வைத்திருப்பார்," என்று 34 வயது கிம் குவோ சியோங் தெரிவித்தார்.
'சிவப்புக் கொடி' எனும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட 100 சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை அதிகாரி களில் இவ்விருவரும் அடங்குவர். இப்போர்ப் பயிற்சி இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை நிவேடாவில் உள்ள நெல்லிஸ் ஆகாயப் படை முகாமில் நடைபெற்றது.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படைக்குச் சொந்தமான ஒன்பது எஃப்-16 ரக போர் விமானங்களும் போர்ப் பயிற்சியில் பங்கெடுத்தன.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை 'சிவப்புக் கொடி' போர்ப் பயிற்சியில் 1982ஆம் ஆண்டிலிருந்து ஈடுபட்டு வருகிறது.
இவ்வாண்டு நடைபெற்ற பயிற்சியில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை, சவூதி ஆகாயப் படை, அமெரிக்க ஆகாயப் படை ஆகியவற்றைச் சேர்ந்த ஏறத்தாழ 55 போர் விமானங்கள் பங்கேற்றன.
இப்பயிற்சியில் முதல்முறையாகப் பங்கெடுப்பதாகத் தெரிவித்த வெய் லோங், அனுபவம் வாய்ந்த தமது உறவினரின் ஆதரவு தமக்குப் பெரிதும் உதவியதாகக் கூறினார். குவோ சியோங் தமது அனு
பவங்களைப் பகிர்ந்துகொண்டதால் தம்மால் சிறப்பாகச் செயல்பட முடிந்ததாக வெய் லோங் தெரிவித்தார். குடும்பத்தைவிட்டு வேறு நாட்டில் இருந்தாலும் உறவினர் ஒருவர் தம்முடன் இருப்பது ஆறுதல் அளிப்பதாக குவோ சியோங் கூறினார்.

