சொத்து முகவர்களாகப் பாசாங்கு செய்து மோசடிக்காரர்கள் சிலர் பணம் பறித்து வருவதாகப் பொதுமக்களுக்குக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களை நம்பி இதுவரை குறைந்தது 144 பேர் ஏமாந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மோசடி காரணமாக ஏறத்தாழ $190,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.
வீடுகள் வாடகைக்கு விடப்
படுகின்றன எனப் பொய் கூறி போலி விளம்பரங்களை மோசடிக்காரர்கள் இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
விளம்பரத்தைக் கிளிக் செய்
பவர்களுக்கு +65 எனத் தொடங்கும் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் செய்தி அனுப்பப்படும்.
உண்மையான சொத்து முகவர்களின் படங்கள், பெயர், உரிமம் எண் ஆகியவற்றை மோசடிக்
காரர்கள் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவல்களை வீட்டு வாடகை விளம்பரங்களிலிருந்து மோசடிக்காரர்கள் பெறுவதாகக் கூறப்படுகிறது
வாடகைக்கு வீடு தேடுவோர் வீட்டைச் சென்று பார்ப்பதற்கு முன்பு முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் அப்பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாக காவல்துறையினர் கூறினர்.
உதாரணத்துக்கு, பிரதான படுக்கையறை ஒன்று வாடகைக்கு விடப்படுவதாகவும் அதைச் சென்று பார்க்க $300 முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் மோசடிக்காரர் தெரிவித்திருந்ததை காவல்துறையினர் சுட்டினர்.
பணத்தை அனுப்ப வங்கிக் கணக்கு அல்லது கைபேசி எண்ணை மோசடிக்காரர்கள் அனுப்பிவைத்தனர்.
பணம் கைக்கு வந்ததும் வாடிக்கையாளர்களிடம் தொடர்புகொள்வதை மோசடிக்காரர்கள் நிறுத்திக்கொண்டனர். அப்போதுதான் தாங்கள் ஏமாந்துவிட்டோம் என்று பலர் உணர்ந்தனர். அதிகாரபூர்வமற்ற தளங்களில் சொத்துகள் குறித்து செய்யப்படும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. விளம்பரத்தில் இடம்பெறும் தொடர்பு எண் குறித்து சொத்து முகவர்களுக்கான மன்றத்திடம் சரிபார்த்து உறுதி செய்துகொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கப்படுகிறது.
அத்துடன் +65 எனத் தொடங்கும் எண்ணிலிருந்து கிடைக்கும் அழைப்புகள், வாட்ஸ்அப் செய்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
+65 எனத் தொடங்கும் எண்ணிலிருந்து அழைப்பு கிடைத்தால் அது வெளிநாட்டிலிருந்து வருகிறது என்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அதிகாரி கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, வாடிக்கையாளர்களிடமிருந்து ரொக்கம் பெற சொத்து முகவர்களுக்கு அனுமதி இல்லை என்று வலியுறுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாது, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பணம் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை கூறியது. இத்தகைய மோசடிகள் குறித்து புகார் செய்ய விரும்புவோர் 1800-255-0000 எனும் எண்ணுடன் தொடர்புகொள்ளலாம். அல்லது இணையம் மூலம் புகார் செய்யலாம்.