தமது முதலாளியைத் தாக்கி அவரிடமிருந்து $37,000க்கும் மேற்பட்ட ரொக்கம், பொருள்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்த மியன்மார் பணிப்பெண்ணுக்கு ஆறு ஆண்டுகள், ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பணம், பொருள்களைக் கொள்ளையடித்தது மட்டுமல்லாது, மடிக்கணினி உடையும் வரை 61 வயது முதலாளியின் தலையில் தொடர்ந்து பலமுறை அவர் அடித்தார். காமன்வெல்த் வட்டாரத்தில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
கைக்குக் கிடைத்ததை எல்லாம் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பிய அந்தப் பணிப்பெண் மியன்மார் திரும்ப விமானப் பயணச்சீட்டை வாங்கினார். ஆனால் விமானத்துக்குள் செல்வதற்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.
கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட முதலாளியின் அடையாளத்தைக் காக்க பணிப்பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதியன்று காலை 10.30 மணி அளவில் அந்தப் பணிப்பெண்ணின் முதலாளி தமது படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது தமது கழுத்தில் கூர்மையான கருவி ஒன்று அழுத்தப்பட்டதை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
கண் விழித்திப் பார்த்தபோது அந்தப் பணிப்பெண் கையில் கத்தி யுடன் பணம் கேட்டு தம்மை
மிரட்டியதாகக் கூறினார்.
அதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் பணிப்பெண்ணின் முதலாளியின் கைகளில் காயம் ஏற்பட்டது. மடிக்
கணினியைப் பயன்படுத்தி
முதலாளியின் தலையில் பணிப்பெண் பலமுறை அடித்தார். உயிருக்குப் பயந்து பணம், நகை இருக்கும் இடத்தைப் பணிப்பெண்ணிடம் அந்த மாது தெரிவித்தார்.
அலமாரியில் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எடுத்த பிறகு முதலாளியின் விரலில் இருந்த வைர மோதிரத்தையும் கழுத்தில் இருந்த சங்கிலியையும் பணிப்பெண் அகற்றினார்.
விமான நிலையத்துக்கு எப்படி செல்வது என்று அந்த பணிப்பெண் கேட்டபோது எம்ஆர்டி ரயில் மூலம் செல்லலாம் என்று அந்த மாது தெரிவித்தார். முதலாளியை கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த அப்
பணிப்பெண் தப்பினார்.
அங்கிருந்து சிட்டி ஹால் வட்டாரத்துக்குச் சென்று விமானப் பயணச்சீட்டை வாங்கினார். அங்கிருந்து சாங்கி விமான நிலையத்துக்கு டாக்சியில் செல்ல முதலாளியின் கடன் அட்டையை அவர் பயன்படுத்தினார்.
இதற்கிடையே கட்டுகளை அவிழ்த்து வரவேற்பு அறைக்குத் தவழ்ந்துச் சென்று காவல்துறையினரை தொலைபேசி மூலம் அழைத்து விவரத்தைச் சொன்னார் பணிப்பெண்ணின் முதலாளி.
இதையடுத்து விமான நிலையத்தில் அப்பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

