கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பாக இருமுறை மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டும் வீட்டில் இருக்காமல், ஆடவர் ஒருவர் செங்காங் பொது மருத்துவ
மனைக்கு வேலைக்குச் சென்றதாக நம்பப்படுகிறது
தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் சிங்கப்பூரரான 34 வயது நூர் அலிஃப் அப்துல் தலிப் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
விதிமீறலின்போது நூர் ஒப்பந்ததாரருக்காக வேலை செய்ததாக செங்காங் பொது மருத்துவமனை தெரிவித்தது.
"நூரின் ஒப்பந்தத்தை அவரது முதலாளி கடந்த ஆண்டு ரத்து செய்தார்.
"விதிமுறையை மீறிய நூருக்கு எதிராக அவரது முதலாளி நடவடிக்கை எடுத்தார். அதுகுறித்து செங்காங் பொது மருத்துவமனைக்குத் தொடர்பு இல்லை," என்று மருத்துவமனை கூறியது.
ஒப்பந்ததாரர் பற்றியும் விதிமீறலின்போது நூர் செய்துகொண்டிருந்த பணி பற்றியும் மருத்துவமனை தகவல் வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதியன்று இரண்டு வெவ்வேறு மருந்தகங்களுக்கு நூர் சென்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
உட்லண்ட்ஸ், செங்காங் ஆகிய வட்டாரங்களில் உள்ள மருந்தகங்களுக்கு நூர் சென்றார்.
அவருக்கு கொவிட்-19 அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இரு மருந்தகங்களும் அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கின.
விதிமுறையின்படி அடுத்த மூன்று நாள்களுக்கு, அதாவது ஜனவரி 20ஆம் தேதி வரை நூர் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் கொவிட்-19 பரிசோதனைக்கு அவர் அனுப்பப்படுவார் என்றும் அந்த இரு மருத்துவர்களில் ஒருவர் நூரிடம் தெரிவித்தார். அடுத்த ஐந்து நாள்களுக்கு, அதாவது ஜனவரி 22ஆம் தேதிவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று இன்னொரு மருத்துவர் நூரிடம் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிற்பகல் 12.40 மணி அளவில் செங்காங் வட்டாரத்தில் உள்ள மருந்தகத்திலிருந்து நூர் சர்கீட் சாலையில் உள்ள தமது வீட்டுக்குச் செல்லாமல் செங்காங் பொது மருத்துவமனைக்கு வேலைக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு செய்ததன் மூலம் தம்மிடமிருந்து மற்றவர்களுக்கு கொவிட்-19 கிருமி பரவும் அபாயத்தை நூர் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

