ஊழியர்கள் மற்றும் எரிசக்தியை அதிகம் சார்ந்திருக்காமல் இருக்க உள்ளூர் நிறுவனங்களை உருமாற்றம் செய்தால் அவை மேலும் வலுவடையும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
ஊழியர் மற்றும் எரிசக்தி
தட்டுப்பாடுகள் சிங்கப்பூர் பொருளியலை நிரந்தரமாகப் பாதிக்கும் அம்சங்களாக இருக்கக்கூடும் என்றார் அவர். சிங்கப்பூர் வட்டார வர்த்தகக் கருத்தரங்கில்
அமைச்சர் வோங் கலந்துகொண்டு பேசினார்.
இந்த நான்கு நாள் உச்சநிலை மாநாடு சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாடு மையத்தில் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனமும் எம்பி சிங்கப்பூர் நிறுவனமும் இணைந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கு நாளை மறுநாள் நிறைவடைகிறது.
வர்த்தகங்கள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி அரசாங்கத்துக்கு நன்கு தெரியும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
கொள்கை மாற்றங்கள் வேண்டு மென்றே படிப்படியாக அறிமுகப்
படுத்தப்படுவதாக அவர் கூறினார். மாற்றங்களை ஏற்று அவற்றுக்கு ஏற்ப நடந்துகொள்ள நிறவனங்களுக்கு இது போதிய அவகாசம் தருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஊழியர் மற்றும் எரிசக்தி தட்டுப்பாடுகளைத் தவிர்க்க முடியாது என்றார்
அமைச்சர் வோங்.
எனவே இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்து கொள்வது புத்திசாலித்தனம் என்று அவர் கூறினார்.
வர்த்தக உருமாற்றம் செய்ய வர்த்தகங்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்கள் அறிமுகப்
படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டினார். ஆனால் இத்திட்டங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவாக இருப்பதாக அவர் கூறினார்.
இந்த எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரித்தால் நன்று என்று திரு வோங் தெரிவித்தார்.
இன்றைய சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதிக அக்கறை காட்டுவதை திரு வோங் சுட்டினார்.
உதாரணத்துக்கு, ஊழியர் பற்றாக்குறை நிறுவனங்களை வெகுவாகப் பாதித்திருப்பதாக அவர் கூறினார்.
நிறுவனங்கள் எதிர்நோக்கும் இந்தச் சவால்கள் பற்றி அரசாங்கம் நன்கு அறிந்துவைத்திருப்பதாக் திரு வோங் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக சிங்கப்பூரின் அனைத்துலக எல்லைகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை என்றும் இதன் காரணமாக ஊழியர் பற்றாக்குறையை நிறுவனங்கள் எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்த நிலை
தற்காலிகமானது என்றார் அவர். சிங்கப்பூர் கொவிட்-19 பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றும் நாட்டின் அனைத்துலக எல்லைகள் கூடிய விரைவில் திறக்கப்படும் என்றும் திரு வோங் தெரிவித்தார். அவ்வாறு நடந்தால் எஸ் பாஸ், வேலை நியமன அட்டை, வைத்திருக்கும் ஊழியர்களுடன் மலேசிய ஊழியர்களையும் உள்ளூர் நிறுவனங்கள் எளிதில் வேலையில் அமர்த்தலாம் என அவர் கூறினார்.

