இக்காலகட்டத்தில் உலகளாவிய நிலையில் அடிக்கடி பல அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நிகழ்வதால் கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிந்திய நாள்களில் பொருளியல், நிதிநிலை பாதிப்புகள் வழக்கமானஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப்
பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தச் சவாலை எதிர்கொள்ள மீள்திறன்மிக்க சூழலை சிங்கப்பூர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அதிர்ச்சிகளைச் சமாளிக்க அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள பொருளியல் உருமாற்றங்கள் கைகொடுத்திருப்பதை திரு ஹெங் சுட்டினார்.
சிங்கப்பூரின் தொழில்துறை உருமாற்றுத் திட்டங்கள் தொழில் துறைகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பதாக அவர் கூறினார்.
இத்திட்டங்கள் 2016ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறிய திரு ஹெங், 2016ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் உற்பத்தித்திறன் வளர்ச்சி ஒவ்வோர் ஆண்டும் 2.7 விழுக்காடு வளர்ச்சி கண்டதாகக் கூறினார்.
கொவிட்-19 பாதிப்பு இருந்தும் இந்த நிலை தொடர்வதாக அவர் தெரிவித்தார்.
2019-2021 காலகட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் இவ்விகிதம் 3.9 விழுக்காடாகப் பதிவானதாக கருத்தரங்கில் பேசியபோது திரு ஹெங் கூறினார்.

