இணையப் பாதுகாப்புத் துறையில் கூடுதலான பெண்களைக் கொண்டுவருவதன் மூலம் திறனாளர் பற்றாக்குறையைப் போக்குவதுடன் நீண்டகால அடிப்படையிலான மேம்பட்ட தொழில்நுட்பத் தீர்வுகளை எட்டமுடியும் என்று இணையப் பாதுகாப்பில் பெண்கள் எனும் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்தக் கருத்தரங்கில் தொடர்பு, தகவல் அமைச்சரும் இணையப் பாதுகாப்பு மற்றும் அறிவார்ந்த தேசத் திட்டம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஜோசஃபின் டியோ கலந்துகொண்டார்.
என்சைன் இன்ஃபோசெக்யூரிட்டி குழுமத்தின் தலைமை நிர்வாகி டேமி தாம், அனைத்துலகக் கல்விக்கான எஸ். ராஜரத்தினம் பள்ளியின் தேசியப் பாதுகாப்புக்கான உன்னத நிலையத்தைச் சேர்ந்த திருவாட்டி டியோ யி-லிங் ஆகியோரும் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் தொழில்நுட்பத் துறையில் அதிகமான பெண்களை இணைத்தால், செய்ததையே செய்யும் 'செக்குமாட்டு' மனப்போக்கை மாற்ற அது உதவும் என்று கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் கருத்துரைத்தனர்.
இணையப் பாதுகாப்பு என்பது சிங்கப்பூரின் அறிவார்ந்த தேச இலக்குகளுக்கு மட்டுமின்றி அதன் இருத்தலுக்கும் மிகவும் முக்கியம் என்றார் அமைச்சர் டியோ. தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்று பார்த்தால், சிங்கப்பூர் மற்ற நாடுகளைக் காட்டிலும் சிறப்பான நிலையில் இருக்கிறது என்றார் அவர்.
சிங்கப்பூரின் தொழில்நுட்பத்துறை ஊழியரணியில் 41 விழுக்காட்டினர் பெண்கள் என்பதை திருமதி டியோ சுட்டினார்.
உலக அளவில் அந்த எண்ணிக்கை சராசரியாக 28 விழுக்காடு மட்டுமே. இருப்பினும் தொழில்நுட்பத் துறையில் தலைமைத்துவப் பொறுப்புகளைப் பெண்கள் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பில் விழிப்புணர்வை அதிகரிக்கவும், பெண்களுக்குக் கைகொடுக்கவும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அமைச்சர் டியோ.

