அங் மோ கியோ வட்டார வீவக வீட்டிற்குள் ஒளிந்துகொண்டு போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்த ஆடவர் இருவர் ஐந்து மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முறையே 52 வயதும் 53 வயதும் ஆன அவ்விருவரும் சகோதரர்கள் என்று கருதப்படுகிறது. தங்கள் 77 வயது தாயாருடன் புளோக் 508, அங் மோ கியோ அவென்யூ 8ல் உள்ள வீட்டுக்குள் இருந்தபடி பூட்டிக்கொண்ட அவர்கள் வெளியே வர மறுத்தனர். முன்னதாக அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுடன் அவர்கள் ஒத்துழைக்க மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிறப்புச் செயலாக்க தளபத்தியத்தின் அதிகாரிகள் பின்னர் வல்லந்தமாக அந்த வீட்டினுள் நுழைய நேரிட்டதாகக் காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
ஆடவர்கள் தங்கள் உயிருக்கும் தாயாரின் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கலாம் என்ற அச்சத்தில் வீட்டினுள் இருந்த மூன்று பேரின் பாதுகாப்பையும் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆடவர் இருவரும் நேற்றுக் காலை 11.55 மணிக்குக் கைதுசெய்யப்பட்டனர்.
சிறப்புச் செயலாக்க தளபத்தியம், நெருக்கடிநேரச் செயலாக்கப் பிரிவு, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆபத்தான செயலில் ஈடுபடக்கூடும் என்று கருதியும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் அவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் ஆடவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
காவல்துறையும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் இதன் தொடர்பில் விசாரணை நடத்திவருகின்றன.

