'எல்டிஏ'வை ஏமாற்றிய ஆடவர்களுக்கு $33,000 அபராதம்
வாகனத் தரநிலை ஒப்புதலுக்கான பரிசோதனையில் தேர்ச்சி பெறுவதற்காக, கனரக வாகனம் ஒன்றில் உலோகத்தாலான உத்தரங்களைப் பொருத்தி அதன் எடையைக் கூட்டிய ஆடவர் இருவருக்கு மொத்தம் 33,000 வெள்ளிக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தை (எல்டிஏ) ஏமாற்றும் நோக்கில் 1,300 கிலோகிராம் எடையிலான உத்தரங்களைப் பத்திரி வைப்பு மூலம் பொருத்தியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். சின் டிரான்ஸ் இஞ்சினியரிங் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான லோ இயோக் லம் (இடது) மற்றும் சுவா செங் காங் (வலது) இருவருக்கும் முறையே 17,500 வெள்ளியும் 15,750 வெள்ளியும் அபராதம் விதிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு அக்டோபருக்கும் 2012ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் இடையில் 21 சம்பவங்களில் அவர்கள் ஏமாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதிகரிக்கும் ரொட்டி விலை
சிங்கப்பூரின் பேரங்காடிகளிலும் சில ரொட்டி தயாரிப்பு நிலையங்களிலும், இந்த ஆண்டுத் தொடக்கக்தில் இருந்து ரொட்டி விலை அதிகரித்துவருகிறது. ரொட்டியைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களின் விலை கூடியிருப்பதும் வர்த்தகம் தொடர்பான இதர செலவுகள் அதிகரித்திருப்பதும் அதற்குக் காரணங்கள் என்று கூறப்பட்டது. 400 கிராம் முதல் 600 கிராம் வரையிலான எடை கொண்ட பிரபல நிறுவனங்களின் ரொட்டிப் பொட்டலங்களின் விலை 10 காசில் இருந்து 20 காசு வரை கூடியுள்ளது. கிருமிப் பரவல் மற்றும் தயாரிப்புப் பொருள்களின் விலை கூடியதால் வேறு வழியின்றி விலையை உயர்த்த நேர்ந்ததாக தயாரிப்பாளர்கள் கூறினர்.
மோசடிக்கு இலக்கான சொத்து முகவர்
சொத்து முகவரான 42 வயது ஆலன் வீக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தெம்பனீஸ் வட்டாரத்தில் மூவறை வீடு பற்றி விசாரித்துத் தொலைபேசி அழைப்புகள் வந்தன.
ஆள்மாறாட்ட மோசடியால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதை அதன் பின்னரே அவர் உணர்ந்தார். அவரது பெயர், புகைப்படம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, வீட்டைப் பார்ப்பதற்கு வைப்புத்தொகை செலுத்தும்படி மோசடிக்காரர் கள் கேட்டிருந்தனர். 140 சதுர அடி அளவிலான மூவறை வீட்டைப் பார்க்கலாம் என்று அவர்கள் கூறியிருந்தனர். உண்மையில் அது ஒரு படுக்கையறையின் அளவு மட்டுமே இருக்கும் என்பதைத் திரு வீ சுட்டினார். ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை இந்த மோசடியில் 144 பேர் ஏறத்தாழ 190,000 வெள்ளியை இழந்துள்ளனர்.
எஸ்பிஎச்சை கஸ்கேடன் பீக் வாங்குகிறது
எஸ்பிஎச் நிறுவனத்தின் ஊடகம் சாரா சொத்துகளை கஸ்கேடன் பீக் கூட்டு நிறுவனக் குழுவிடம் கைமாற்றிவிடுவதற்கு எஸ்பிஎச்சின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கஸ்கேடன் பீக் குழுமத்தில் ஹோட்டல் பிராபர்ட்டீஸ் நிறுவனம், மேப்பிள்ட்ரீ, கேப்பிட்டலேண்ட் ஆகியவை முக்கிய பங்குதாரர்கள். எஸ்பிஎச்சில் 96.55% பங்குகளை வைத்திருக்கும் 89 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்குதாரர்கள் கஸ்கேடன் பீக்கிடம் சொத்துகளை விற்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மின்னிலக்கமுறையில் அவர்கள் வாக்களித்தனர். எஸ்பிஎச்சை வாங்குவதற்கு கெப்பல் கார்ப்பரேஷன் நிறுவனமும் பெரிதும் முயற்சி செய்தது. ஆனால் எஸ்பிஎச் அதனை நிராகரித்தது.
தேசிய சேவை செய்யாதவருக்கு சிறை
தேசிய சேவை செய்யாமல் ஏமாற்றிய ஆடவருக்குச் சிறை
தேசிய சேவைக்குச் செல்லாமல் 17 ஆண்டாய் ஏமாற்றிய ஆடவருக்கு நேற்று ஐந்தாண்டு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உடலுறுதிப் பயிற்றுவிப்பாளரான 41 வயது முகமது சைய்டி அகமது, குடிமைத் தற்காப்புச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். 2004ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி ஜலான் பாஹார் முகாமில் உள்ள தலைமையகத்தின் அடிப்படை மீட்புப் பயிற்சி நிலையத்தில் அவர் தேசியசேவை செய்ய உத்தரவிடப்பட்டது. அப்போது தேசியசேவையில் சேர்ந்த அவர் அந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தலைமறைவானார். ஐந்து மாதங்கள் கழித்துக் காவல்துறை அவரைக் கைதுசெய்தது. மீண்டும் டிசம்பரில் தேசிய சேவையைத் தொடர உத்தரவிடப்பட்டது.
ஆனால் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்த அவர் அதில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் தேசியசேவையில் இணையவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் சென்ற ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி அவர் பிடிபட்டார்.
ஏப்ரல் 4 நாடாளுமன்றக் கூட்டம்
அடுத்த மாதம் (ஏப்ரல்) 4ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று நாடாளுமன்ற அலுவலர் நேற்று தெரிவித்தார்.

