குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் 377ஏ பிரிவு, 'எல்ஜிபிடி' எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபாலினர், திருநங்கைகள் குறித்த விவகாரங்கள் ஆகியவற்றை பற்றி ரிச் பிரிவு பொது கருத்தாய்வு நடத்தியுள்ளது. ரிச் என்பது அரசாங்க கருத்தறியும் பிரிவாகும்.
இந்தத் தலைப்பையொட்டி ரிச் பொதுமக்களிடையே கருத்துகள் சேகரிப்பது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.
ஆண்களின் ஓரினப் பாலியல் உறவைக் குற்றச்செயலாக வகைப்படுத்தும் 377ஏ சட்டப்பிரிவை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வது குறித்து அரசாங்கம் கவனமாகப் பரிசீலித்து வருவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நாடாளுமன்றத்தில் சென்ற மாதம் தெரிவித்திருந்தார்.
அச்சட்டப்பிரிவு தொடர்பில் வெவ்வேறு குழுக்களுடன் பேச வேண்டும், பல்வேறுபட்ட கண்ணோட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். பின்னர் அவற்றைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது அமைச்சர் கூறினார்.
இதனையடுத்து இந்தக் கருத்தாய்வில் கலந்துகொள்ள அனைத்து தரப்பினருக்கும் ரிச் அழைப்பு விடுத்திருந்தது.
எல்ஜிபிடி சமூகம் சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா, அதற்கு ஆதரவு தரப்படுகிறதா போன்ற கேள்விகள் மக்களிடையே கேட்கப்பட்டன். 377A பிரிவு குறித்தும் கருத்துகள் சேகரிக்கப்ப்டடன. சேகரிக்கப்பட்ட கருத்துகள் சம்பந்தபட்ட அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என ரிச் தெரிவித்தது.

