இரவு நேரத்தில் வழக்கமாகக் கடல் அலைகள் கண்னுக்குத் தென்படாது. அந்த நிலை மாறி, சிங்கப்பூர்க் கடற்கரையோரத்தில் நீல நிற ஒளி வீசி வருகிறது.
அண்மை நாள்களாக சாங்கி, பாசிர் ரிஸ் ஆகிய கடற்கரைகளில் இந்த அதிசயக் காட்சிகள் காணப்பட்டு வருகின்றன.
ஒருவகை பாசியால் இது ஏற்படுகிறது. அலைகள் கரைபுரளும் நேரத்தில் இந்தப் பாசிகள் தங்கள் ரசாயன சக்தியை மின்சக்தியாக மாற்றுகின்றன. அப்படி அது மாறும்போது நீல நிற ஒளிக்கதிர்கள் அந்தப் பாசியிலிருந்து வெளிவருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரில் அலைகள் நீல ஒளி வீசுவது இது முதல் முறை அல்ல. 2016ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
இதனைக் கண்டவர்களுக்கு சொல்லமுடியாத அளவுக்கு வியப்பு ஏற்பட்டது. பார்ப்பவர்களைப் பரவசமாக்கும் இந்த அலைகளின் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த இயற்கை அதிசய நிகழ்வு எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது தெரியாது. அதைப் பார்க்கும் ஆசை இருந்தால், அதை எட்டி நின்று பார்ப்பதே சிறந்தது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தினர்.

