அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் சில பயணிகள் புறப்படுவதற்கு முன் எடுக்கவேண்டிய 'ஏஆர்டி' பரிசோதனைகளை மெய்நிகராக மேற்கொள்ளலாம். இதன்படி தகுதிபெறும் பயணிகள் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது மெய்நிகராகக் கண்காணிக்கப்படுவர்.
இந்த ஏற்பாடு பயணிகளுக்கு வசதியாக அமையும், சில வேளைகளில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான செலவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், குறுகிய காலத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இந்த ஏற்பாட்டிற்குத் தகுதிபெறமாட்டார்கள்.
சில நாடுகளிலிருந்து வரும் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர் ஆகியோர் மெய்நிகராக கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று இம்மாதத் தொடக்கத்தில் சுகாதார அமைச்சு தனது இணையத்தளத்தில் தெரிவித்தது. இந்தியா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள், பல மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து வருவோருக்கு இது பொருந்தும்.
இந்த ஏற்பாட்டின்படி சிங்கப்பூரில் அல்லது சம்பந்தப்பட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட 'ஏஆர்டி' பரிசோதனைக் கருவிகளை மட்டும்தான் பயணிகள் பயன்படுத்தமுடியும் என்று அமைச்சு குறிப்பிட்டது. சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு இரண்டு நாள்களுக்குள் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் என்றும் அமைச்சு பயணிகளுக்கு நினைவூட்டியது.
இந்த ஏற்பாட்டிற்குத் தகுதிபெறும் நாடுகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பதை அறிந்துகொள்ள ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சுகாதார அமைச்சைத் தொடர்புகொண்டுள்ளது. சுகாதாரப் பராமரிப்பாளர்களை மெய்நிகராகத் தொடர்புகொண்டு 'ஏஆர்டி' பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு வகைசெய்யும் திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் அமைச்சு அறிமுகப்படுத்தியது.

