செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6e97b406-456f-42bb-9366-d02115fa3284
-

வாகன உரிமைச் சான்றிதழ்

கட்டணங்கள் அதிகரிப்பு

பெரும்பாலான வாகனப் பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் கூடின.

1,600சிசி கொள்ளளவைக் கொண்ட சிறிய வாகனங்களுக்கான பிரிவில் கட்டணம் 4.5 விழுக்காடு அதிகரித்து 71,556 வெள்ளியாகப் பதிவானது. பெரிய வாகனங்களுக்கான கட்டணம் 4.2 விழுக்காடு அதிகரித்து 98,889 வெள்ளியாகப் பதிவானது.

சரக்கு வாகனங்கள், பேருந்துகள் பிரிவில் கட்டணம் 5.3 விழுக்காடு கூடி 51,504 வெள்ளியாகப் பதிவானது.

பொதுப் பிரிவில் இடம்பெறும் வாகனங்களுக்கான கட்டணம் 98,890 வெள்ளியிலிருந்து சற்று அதிகரித்து 99,010ஆகப் பதிவானது.

மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் மட்டும் 7.9 விழுக்காடு குறைந்து 10,501 வெள்ளியாகப் பதிவானது.

ஈராண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முத்தரப்பு ராணுவப் பயிற்சி

ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் முத்தரப்பு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

தாய்லாந்தில் நடைபெறும் பெரிய அளவிலான முத்தரப்பு ஆகாயப் படைப் பயிற்சியில் சிங்கப்பூர் பங்கேற்கிறது.

சுமார் 24 ராணுவ விமானங்களையும் 550 ஆகாயப் படை அதிகாரிகளையும் பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 நிலவரத்தால் 'எக்சர்சைஸ் கோப் டைகர்' என்ற இந்தப் பயிற்சியை ஈராண்டுகளாக நடத்த முடியவில்லை. இப்பயிற்சி 26வது முறையாக நடைபெறுகிறது.

13,166 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் புதிதாக 13,166 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையன்று பதிவான எண்ணிக்கையைவிட நேற்று முன்தினம் பதிவானது குறைவு.

மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,023ஆகப் பதிவானது. ஆறு பேர் மரணமடைந்தனர்.

24 பேர் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 141 பேருக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்பட்டது.

வாராந்திர கிருமித்தொற்று விகிதம் 0.74ஆகப் பதிவானது. தொடர்ந்து 21வது நாளாக இது ஒன்றுக்குக் கீழ் பதிவானது.

சுகாதார அமைச்சு தினமும் வெளியிட்டு வரும் கொவிட்-19 புள்ளி விவரங்களில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

$55மி. மதிப்புள்ள 'வெர்டுன் ஹவுஸ்'

'முஸ்தஃபா சென்டர்' கடைத்தொகுதிக்கு அருகே இருக்கும் 'வெர்டுன் ஹவுஸ்' வர்த்தகக் கட்டடத்தை (படம்: டெலாசா) மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த மறுவிற்பனை முறையில் விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் விலை 55 மில்லியன் வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அடியின் விலை 1,790 வெள்ளி.