சிங்கப்பூருக்கும் தாய்லாந்தின் பிரபல சுற்றுலாம்தலமாக விளங்கும் புக்கெட் தீவுக்கும் இடையே சொகுசுக் கப்பல்களுக்கான 'விடிஎல்' எனும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதை இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் திறக்கப்படலாம். இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தாய்லாந்தில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் திரு அலெக்சாண்டர் லிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார். சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அவ்வாறே சொன்னது.
இதன் தொடர்பில் தாய்லாந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இரு அமைப்புகளும் குறிப்பிட்டன.
இந்த 'விடிஎல்' பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்றும் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு 24 மணி நேரத்துக்குள் 'ஏஆர்டி' பரிசோதனையை மேற்கொண்டு அதன் முடிவை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் சென்ற வாரம் 'பேங்காக் போஸ்ட்' நாளிதழ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு பயணத்தின்போதும் சொகுசுக் கப்பலில் அதிகபட்சமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகள் இருக்கமுடியும் எனக் கருதப்படுகிறது. எனினும், இதுபோன்ற திட்டங்களுக்கு தாய்லாந்தின் கொவிட்-19 நிலையம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.
கொள்ளைநோய்ப் பரவல் சூழலுக்கு முன்பு 2019ஆம் ஆண்டு 250,000க்கும் அதிகமான அனைத்துலகப் பயணிகள் 110 சொகுசுக் கப்பல்களில் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டனர். இந்த எண்ணிக்கை, அந்த ஆண்டு தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்ட அனைத்து சொகுசுக் கப்பல்களின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு.