கிரேத்தா ஆயர் பகுதியைப் பல்வேறு சீனக் கிளை மொழிகளில் விளக்கி காண்பிப்பதற்கு வகைசெய்யும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
'டிஸ்கவர் துரூ டயலெக்ட்ஸ்: கிரேத்தா ஆயர் ஹெரிட்டேஜ் டுவர்ஸ்' எனும் அத்திட்டத்தின்கீழ் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமையன்று பல சீனக் கிளை மொழி விளக்கங்களுடன் கிரேத்தா ஆயர் சுற்றிக் காட்டப்படும். இந்த மாதம் முதல் இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரை இந்த ஏற்பாடு நடப்பில் இருக்கும்.
ஒவ்வொரு சுற்றுலாவும் ஒன்றரை மணிநேரம் நீடிக்கும். கென்டனீஸ், தியோச்சியூ, ஹாக்கியேன் ஆகிய மொழிகளில் சுற்றுலாக்கள் நடத்தப்படும்.
மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் இடம்பெறும் ஒவ்வொரு சுற்றுலாவும் இந்த மூன்று மொழிகளில் ஒன்றில் நடத்தப்படும்.
ஏற்கெனவே கிரேத்தா ஆயருக்கான சுற்றுலாக்கள் ஆங்கிலம், மாண்டரின் மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுடன் புதிய சுற்றுலாக்களும் சேர்க்கப்படும் என்று தேசிய மரபுடைமை வாரியத்தின் கொள்கை, சமூகப் பிரிவின் துணைத் தலைமை நிர்வாகி அல்வின் டான் கூறினார்.
இத்திட்டம், மூத்த குடிமக்களைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டது என்று திரு டான் குறிப்பிட்டார். https://nhb-eco.peatix.com/ எனும் இணையத்தளத்தில் கிரேத்தா ஆயர் சுற்றுலாக்களுக்குப் பதிவுசெய்துகொள்ளலாம்.
ஒரு நுழைவுச்சீட்டின் விலை ஐந்து வெள்ளி.

