கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் சூழல் தலைதூக்கியதிலிருந்து வசதி குறைந்த சிறுவர்களுக்கு உதவ சுமார் 12 மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு உதவ வர்த்தகங்களும் மக்களும் கூடுதல் முயற்சிகளை எடுத்ததால் இது சாத்தியமானதாகத் தெரிவிக்கப்பட்டது. வரலாறு காணாத வகையில் 1,744 வர்த்தகங்களும் தனிநபர்களும் 6.4 மில்லியன் வெள்ளியை நன்கொடையாக வழங்கியதாக சிங்கப்பூர் சிறுவர் சங்கம் தெரிவித்தது.
கொவிட்-19 சூழலுக்கு முந்தைய காலத்தைவிட கடந்த ஈராண்டுகளில் அதிகமானோர் நிதியுதவிக்கு விண்ணப்பித்ததாக சங்கத்தின் தலைவர் திரு கோ சூன் ஹுய் கூறினார். இது, கொள்ளைநோய்ப் பரவலால் குறைந்த வருமானக் குடும்பங்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டதைக் காட்டுவதாக அவர் சுட்டினார்.
பீச் ரோட் பார்க்ரோயல் ஹோட்டலில் நடைபெற்ற நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் திரு கோ பேசினார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்னும் கலந்துகொண்டார்.
"நமது நம்பிக்கைக்கும் வருங்காலத்திற்கும் சிறுவர்கள்தான் அடையாளம். ஒவ்வொரு பிள்ளையின் நலனையும் கருத்தில்கொண்டு அவர்களுக்காக முடிந்ததை செய்யவேண்டும், குறிப்பாக அன்பும் பாதுகாப்பும் தேவைப்படுவோருக்கு உதவவேண்டும்," என்று சிங்கப்பூர் சிறுவர் சங்கத்தின் ஆதரவளருமான திரு டியோ குறிப்பிட்டார்.

