தொழில்நுட்பப் பெருநிறுவனமான ஸேப் அதன் புதிய ஆய்வு, புத்தாக்க நிலையத்தை சிங்கப்பூரில் திறந்துள்ளது. நேற்று நடைபெற்ற திறப்புவிழாவில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கலந்துகொண்டார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் 250 மில்லியன் வெள்ளி முதலீட்டை ஈர்த்துள்ள இந்தப் புதிய ஆய்வு, புத்தாக்க நிலையம், மென்பொருள் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் என 500 வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
200 பேர் இந்த ஆண்டே வேலையில் சேர்த்துக்கொள்ளப்படவிருக்கின்றனர்.
ஸேப் லேப்ஸ் சிங்கப்பூர் எனும் புதிய ஆய்வு நிலையம் மேப்பிள்ட்ரீ வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஸேப் நிறுவனம் தென்கிழக்காசியாவில் அமைத்திருக்கும் அதன் முதல் ஆய்வு நிலையம் இது.
உலக அளவில் அதன் 21ஆவது இத்தகைய நிலையமாக சிங்கப்பூர் நிலையம் அமைகிறது.
மின்னிலக்க வர்த்தகச் சங்கிலி, நீடித்த நிலைத்தன்மை, இயந்திரக் கற்றல் முறை, செயற்கை நுண்ணறிவாற்றல் ஆகிய அம்சங்களில் இது கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
மென்பொருள் தலைமைத்துவம், உள்ளூர்த் திறனாளர்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றுக்காக ஸேப் நிலையம் சிங்கப்பூரின் உயர்கல்வி நிலையங்களுடன் இணைந்து செயலாற்றும்.
இதன்மூலம் 2024ஆம் ஆண்டுக்குள் அதன் தொழில்நுட்பத் திறனாளர்களின் எண்ணிக்கையை இருமடங்காக்குவது நோக்கம்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பள்ளி, ஸேப் நிறுவனத்துடன் ஒன்பது ஆண்டு பங்காளித்துவத்தில் இணைந்துள்ளது. ஆண்டுக்கு 20 முதல் 30 மாணவர்கள் ஸேப் நிறுவனத்தில் தொழில்முறைப் பயிற்சி பெற அது வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
உள்ளூர் வர்த்தகங்களுக்கும் புதிய தொழில்நுட்பம் தொடர்பில் புதிய நிலையம் கைகொடுக்கும்.
புதிய நிலையத் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய சிங்கப்பூர் பொருளியல் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜேக்குலின் போ, ஆய்வு, மேம்பாட்டில் ஸேப் நிறுவனம் காட்டும் கடப்பாட்டைப் பாராட்டினார்.
புத்தாக்கத்துடன் கூடிய துடிப்புமிக்க உலகளாவிய மின்னிலக்கப் பொருளியல் எனும் சிங்கப்பூரின் இலக்குகளுடன் நிறுவனத்தின் இலக்குகள் பொருந்திப்போவதாக அவர் குறிப்பிட்டார்.
'ஸேப்' மென்பொருள் நிறுவனம் சிங்கப்பூரில் ஆய்வு நிலையத்தைத் திறந்துள்ளது

