நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) 30ஆம் ஆண்டு நிதித் திரட்டு இயக்கத்தின் ஓர் அங்கமாக, முதல்முறையாக 'கிவிங் டே' எனும் நன்கொடை வழங்கும் நாளுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒரு மில்லியன் வெள்ளியைத் திரட்டும் இலக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிதித் திரட்டில் நேற்றுப் பிற்பகல் இரண்டரை மணிக்கு 780,000 வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டிருந்தது.
மனிதவளம், தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 1997ஆம் ஆண்டு தாம் மாணவர் சங்கத் தலைவராக இருந்தபோது, வசதிகுறைந்த மாணவர்களுக்குத் திரட்டப்படும் கல்வி உதவி நிதிக்கு ஈடான தொகையை வழங்கும்படி கல்வி அமைச்சு, பல்கலைக்கழகம் இரண்டையும் கேட்டுக்கொண்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
நேற்றைய நிகழ்ச்சியில் நிதி உதவித் திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவர் முகமது சலிஹின் முகமது காசிம் அதுகுறித்துப் பகிர்ந்துகொண்டார்.
2020ஆம் ஆண்டு என்டியுவில் சேர்ந்த அவர் தேர்வுகளுக்குத் தயாராகும் வேளையில் தாயாருக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. பெட்ரோல் நிலையத்தில் உதவியாளராக இருந்த தந்தை வேலையை இழந்தார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கல்வி உதவி நிதி மூலம் அவருக்கு ஆறாயிரம் வெள்ளி வழங்கப்பட்டது. அந்தத் தொகை, குடும்பத்தின் மருத்துவச் செலவுக்கும் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட பொதுப் பயனீட்டுக் கழகக் கட்டணங்களைச் செலுத்தவும் உதவியதாக மாணவர் சலிஹின் குறிப்பிட்டார்.
'கிவிங் டே' நிதித் திரட்டுக்கு நன்கொடை வழங்க விரும்புவோர் இன்று காலை ஒன்பது மணி வரை பங்களிக்க முடியும். ஆர்வமுள்ளோர் 6592 3112 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு மாணவர் கல்வி உதவி நிதிக்கு தொகை வழங்கலாம்.

